விவசாயியை அடித்த போலீஸ்.. எஸ்.ஐ,க்கு பளார் விட்ட பெண்..! கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்து
விழுப்புரம் அருகே குடிகாரக் கணவனை தாக்கிய, காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் பெண் ஒருவர் அறைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மது அருந்திய நபரை சமாளிக்க இயலாமல் போலீசார் தவித்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
விழுப்புரம் மாவட்டம் அரசூர் அடுத்த ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துராமன் என்பவருக்கும், கட்டிட ஒப்பந்ததர் சந்திரபோஸுக்கும் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறு தொடர்பாக, திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்தில் சந்திரபோஸ் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரிக்க உதவி ஆய்வாளர் தங்கவேலு ஒரு போலீஸ்காரரை அழைத்துக் கொண்டு ஆனத்தூர் கிராமத்தில் உள்ள விவசாயி முத்துராமனின் வீட்டுக்கு சென்றுள்ளார். போதையில் படுத்திருந்த முத்துராமனை எழுப்பி உதவி ஆய்வாளர் தங்கவேலு விசாரித்த போது அவர்களுக்குள் உண்டான வாக்குவாதத்தில், ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர் தங்கவேலு, ஓங்கி அடித்ததில் முத்துராமனின் முக்குடைந்து ரத்தம் சிந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
இதையடுத்து தன்னை அடித்த உதவி ஆய்வாளரை இருசக்கர வாகனத்தை எடுக்கவிடாமல் தடுத்தார் முத்துராமன்.
அதனை படம் பிடிக்க முயன்ற காவலரின் செல்போனைப் பறித்த முத்துராமன் ஆவேசமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்க, தனது செல்போனை திரும்ப பெறுவதற்காக அந்த காவலர் முத்துராமனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்
இதையடுத்து தனது இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து செல்ல முயன்ற காவல் உதவி ஆய்வாளரை மறித்து வாகன சாவியை பறிக்க முயன்ற விவசாயியின் மனைவி, தன் கணவனை எப்படி அடிக்கலாம் ? என நியாயம் கேட்டதோடு , உதவி ஆய்வாளர் தங்கவேலுவின் கன்னத்திலும் பளார் என அறைவிட்டதால், தங்கவேலு வண்டியை விட்டு இறங்கும் நிலை ஏற்பட்டது
இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சற்று தொலைவில் சென்று செல்போன் மூலம் கூடுதல் போலீசை வரவழைக்க தகவல் தெரிவித்தார் தங்கவேலு.
தங்கவேலு, திரும்பி வருவதற்குள் அவரது இருசக்கரவாகனத்தை மறைத்து வைத்த அந்தபகுதி இளைஞர்கள், முத்துராமனை அடித்ததற்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உதவி ஆய்வாளர் கொடுத்த தகவலை நம்பி போலீஸ் படையுடன் சென்ற டி.எஸ்.பி நல்லசிவம், காவல் ஆய்வாளர் பாண்டியன் ஆகியோரையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். பின்னர் அங்கு வந்த வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் அதிகாரிகளை மீட்டுச்சென்றனர்
இதற்கிடையே உதவி ஆய்வாளர் தாக்கியதில் முகத்தில் காயம் அடைந்த முத்துராமன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தங்கவேலுக்கு கன்னத்தில் அடிவிழுந்தாலும் இதுவரை புகார் ஏதும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Comments