மாணவியை கொன்று எரித்த கொடூரர்கள்..! திருச்சி பட்ட பகல் கொடூரம்

0 31962

திருச்சி அருகே மர்மமான முறையில் சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளைப் பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உறவினர்கள் 2 பேரிடம் ஐ.ஜி., டி.ஐ.ஜி., தீவிர விசாரணை நடத்தினர்.

திருச்சி மாவட்டம், அதவத்தூர் கிராமத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி நேற்று வீட்டிற்கு அருகாமையில் உள்ள மர அறுவை ஆலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற நிலையில், காட்டுப்பகுதியில் தீயில் கருகி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்தசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே, அந்த மாணவி கடந்த 3 மாத காலமாக அண்ணன் உறவு முறை உடைய செந்தில் என்பவரிடம் செல்போனில் பேசி வந்ததாகவும், அதனை மாணவியின் தந்தை பெரியசாமி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது நோட்டு புத்தகத்தில் மாணவி, செந்திலின் பெயரை எழுதி வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில், மாணவிக்கு அண்ணன் உறவு முறை வரக்கூடிய உறவினரான செந்திலையும், அவரது நண்பரையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.

2 பேரிடமும் சோமரசன் பேட்டை காவல் நிலையத்தில் வைத்து ஐ.ஜி.ஜெயராமன், டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதனிடையே மாணவி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 11 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி மணிவண்ணன் தலைமையில், 3 டி.எஸ்.பி.க்கள், ஏழு காவல் ஆய்வாளர்கள் அடங்கிய 11 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

கிடைத்த தடயங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையோடு ஒப்பிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி.ஜெயராமன் பேட்டியளித்துள்ளார். 

இதனிடையே மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 3 மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேத பரிசோதனை மேற்கொண்டது. சுமார் இரண்டரை  மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது.  உடற்கூராய்வை வீடியோவாக காவல்துறையினர் பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து, மாணவியின் உடல் அமரர் ஊர்தி மூலம் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, மாணவி எரித்துக் கொல்லப்பட்தற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழுக்கமிட்ட உறவினர்கள் சிலரை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிறுமி கொல்லப்பட்டது தொடர்பாக, தாமாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை துவங்கியுள்ளது. தற்போது உயர்மட்ட குழுவினருடன் Skype மூலம் அவசர ஆலோசனை நடைபெற உள்ளதாக ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments