லடாக்கில் பிரச்சனைக்கு உரிய இடத்தில் படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா - சீனா முடிவு
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யி உடன் வீடியோ அழைப்பில் நேற்று சுமார் 2 மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்தே, கால்வன் பகுதியில் இருந்து சீனப் படைகள் பின்வாங்கிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எல்லைப் பிரச்சனைக்கான சீன அரசின் சிறப்பு பிரதிநிதி வாங்-யி உடன் இந்திய சிறப்பு பிரதிநிதி அஜித் தோவலும், தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய-சீன எல்லையின் மேற்குப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து வெளிப்படையாகவும் ஆழமாகவும் கருத்துகளை பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு உறவுகள் வளர்வதற்கு எல்லையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவது முக்கியமானது என்பதோடு, வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாற அனுமதிக்கக் கூடாது என இருநாட்டு தலைவர்களும் ஏற்கெனவே கருத்தொற்றுமை எட்டியுள்ளனர். அதை வழிகாட்டுதலாக பின்பற்றுவது என பேச்சுவார்த்தையின்போது சிறப்பு பிரதிநிதிகள் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கேற்ப, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டிலும், எல்லைப் பகுதிகளிலும் உடனடியாக படைகளின் மோதல் போக்கை முற்றாக விலக்கிக் கொள்வது அவசியம் என அஜித் தோவல்-வாங் யி ஒப்புக் கொண்டனர்.
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில், தற்போது மோதல் போக்கு விலக்கிக் கொள்ளப்பட்டு வரும் பகுதியில், அதை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என ஒப்புக் கொள்ளப்பட்டது. அனைத்துப் பகுதிகளிலும் படிப்படியாக இதேபோல் மோதல் போக்கை விலக்கிக் கொள்வதை இருதரப்பும் உறுதிப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை இருதரப்பும் மதித்து, கடைப்பிடிக்க வேண்டும், ஏற்கெனவே உள்ள நிலையை மாற்றும் வகையில் தன்னிச்சையாக எந்த முடிவும் டுக்கக் கூடாது, எதிர்காலத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய எந்தவொரு சம்பவமும் நேராமல் தவிர்ப்பது என சிறப்பு பிரதிநிதிகள் இருவரும் உடன்பட்டனர்.
இந்திய-சீன எல்லையில் நீடித்த மற்றும் முழுமையான அமைதி நிலவ, ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்கள், நெறிமுறைகளின்படி பேச்சுவார்த்தையை தொடர்வது என்றும், அஜித் தோவல்-வாங் யி பேச்சில் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வீடியோ அழைப்பு மூலம், சுமார் 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இதைத் தொடர்ந்தே கால்வன் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்ட பகுதியில் இருந்து சீன வீரர்கள் பின்வாங்கிச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments