சென்னையில் என்னென்ன கட்டுப்பாடுகள்? தளர்வுகள்?

0 3666
சுமார் 17 நாட்களுக்கு பிறகு சென்னையில் சலூன் கடைகள், தேநீர் கடைகள் திறப்பு

சென்னையில் இன்று முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. ஆட்டோக்கள், டாக்ஸி வாகனங்கள் ஓடத் தொடங்கியுள்ளன. சுமார் 17 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள், தேநீர் கடைகள், இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

சென்னையில் காலை முதல் ஆட்டோக்கள், டாக்ஸி வாகனங்கள் ஓடத்தொடங்கியுள்ளன. டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பேரும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாரீஸ் கார்னர், மண்ணடி பகுதியில் ஆட்டோக்களில் 5 முதல் 6 பேர் வரை பயணித்தனர்.

சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் இன்று முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான சாலைகளில் காலை முதலே வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. முக்கிய சாலைகளில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. போலீசார் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேநீர் கடைகள் பார்சல் சேவையுடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சிலர் தடையை மீறி கடைகளுக்கு அருகில் நின்று தேநீர் அருந்தினர். அதேபோன்று, உணவகங்களும் காலை 6 மணி தொடங்கி இரவு 9 மணிவரை பார்சல் சேவையுடன் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 17 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள், அழகு நிலையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கின. ஊழியர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சலூன் கடைகள், அழகு நிலையங்களில் ஏசி வசதியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி கடைகள் மற்றும் மீன் சந்தைகளும் காலை முதல் செயல்பட தொடங்கியுள்ளன. தனிநபர் இடைவெளியுடன் பொதுமக்கள் இறைச்சி வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்கள் செயல்படுவதற்கான நேரக்கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பெட்ரோல் நிலையங்கள் செயல்படும்.

மேலும், இன்று முதல் வங்கிகள் வழக்கமான நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தனிநபர் இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 18 நாட்களுக்கு பிறகு வங்கிகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதால், காலை முதலே ஏராளமானோர் வங்கிகளில் குவிந்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments