'ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கட்டணம்' - கொரோனா பாதித்த டாக்டரை அறையில் அடைத்த மருத்துவமனை

0 28867

கொரோனா நோயை கட்டுப்படுத்த நாடு முழுவதும் டாக்டர்கள் போராடி வருகின்றனர். பிரதமர், குடியரசுத் தலைவர், அரசியல் பிரபலங்கள் , விளையாட்டு பிரபலங்கள் டாக்டர்களின் சேவையை பாராட்டி வருகின்றனர். அண்மையில்தான் தேசிய மருத்துவர்கள் தினமும் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பாதித்த டாக்டர் ஒருவர் கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தினால், அவரை அறைக்குள் அடைத்து வைத்த கொடுமை தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.

ஹைதரபாத் புறநகர் பகுதியில் நலகுந்தா உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் டாக்டர். சுல்தானா. இவருக்கு சில நாள்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டிலேயே இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஜூலை 1- ந் தேதி சந்தர்காட் பகுதியில் உள்ள தும்பே மருத்துவமனையில் இவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, ரூ. 1.9 லட்சம் கட்டணமாக செலுத்தியுள்ளார். தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், டிஸ்சார்ஜ் செய்ய அவர் தயாரானார். அப்போது, நாள் ஒன்றுக்கு கட்டணமாக ஒரு லட்சம் கட்டணம் செலுத்த வேண்டுமென்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. டாக்டர் .சுல்தானா கட்டணத்தை செலுத்த மறுத்துள்ளார்.

தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் சுல்தானாவை தனி அறையில் போட்டு அடைத்து வைத்து விட்டு, 'பணம் கட்டினால்தான் வெளியே விடுவோம் 'என்று கூறி விட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக, வாட்ஸப்பில் கண்ணீர் மல்க டாக்டர். சுல்தானா வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. உடனடியாக சந்தர்காட் போலீஸார் டாக்டர் அடைத்து வைக்கப்பட்டிருந்த தும்பே மருத்துவமனைக்கு சென்று சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சுல்தானா பணி புரிந்த மருத்துவமனை டாக்டர்களும் தும்பே மருத்துவமனைக்கு வந்தனர். இதையடுத்து, டாக்டர். சுல்தானா விடுவிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து தும்பே மருத்துவமனை மருத்துவர் அப்துல்லா சலீம் கூறுகையில், '' டாக்டர். சுல்தானா டீலக்ஸ் வார்டில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கும் அவர் உரிய முறையில் ஒத்துழைக்கவில்லை. இதனால், அவரை அறையில் வைத்து பூட்டினோம். கடந்த சனிக்கிழமை நாங்களே சந்தர்காட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டோம்.'' என்று குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

சுல்தானா பணியாற்றிய நலகுந்தா அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கே.சங்கர் கூறுகையில், '' கோவிட் வாரியர்களுக்கு மாநில அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக டாக்டர். சுல்தானாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து மருத்துவர் எங்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் இந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்துள்ளார். இதனால், ஏற்பட்ட குழப்பம்தான் அது'' என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments