மும்பையில் தொடர்ந்து கனமழை.. தாழ்வான பகுதிகளில் வெள்ளம்..!
மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அலைகள் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மும்பை, தானே, பால்கர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெள்ளி இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.
சனி இரவு முதல் மழை தீவிரமடைந்துள்ளது. ஞாயிறு காலை எட்டரை மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தெற்கு மும்பையின் கொலாபாவில் 13 சென்டிமீட்டரும், வடக்கு மும்பையின் சாந்தாகுரூசில் 20 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
இடைவிடாமல் மழை பெய்து வருவதால் தாதரின் ஹிந்த்மாதா, மாகிமின் கிங்ஸ் சர்க்கிள் ஆகிய பகுதிகளில் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை மாநகராட்சி அலுவலர்கள் மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்றினர்.
பலத்த மழையால் மும்பைக்கு அருகே உள்ள பொவாய் ஏரி நிரம்பித் தண்ணீர் மிதி ஆற்றுக்கு வழிந்தோடுகிறது.
மேற்குத் திசையில் இருந்து பலத்த காற்றும் வீசுவதால் அலைகள் வழக்கத்தைவிடச் சீற்றத்துடன் காணப்படுகின்றன. இதனாலும் 3 நாட்களாகப் பலத்த மழை பெய்வதாலும் கொலாபாவில் கடலோரப் பகுதி மீனவர் குடியிருப்புகளில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதனால் கடலோரம் வாழும் மக்கள் பாதுகாப்பான வேறிடங்களுக்குச் செல்லும்படி மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Comments