மருத்துவம் படிக்கவில்லை; ஆனால், கொரோனா மருந்து கண்டுபிடிக்க அச்சாணி- யார் இந்த சுசித்ரா எல்லா

0 19668

கொரோனா... கோவாக்ஸின் இப்போது இந்தியா முழுவதும் இதுதான் பேச்சாக இருக்கிறது. உலக நாடுகள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருக்கையில் இந்தியாவில் ஆகஸ்ட் 15- ந் தேதி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் அறிவித்துள்ளது.

ஹைதரபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த கோவாக்ஸின் என்ற மருந்துக்கு முக்கியத்துவம் கொடுத்து , அதிவிரைவாக பரிசோதனைகளை நடத்த ஐ.சி.எம்.ஆர் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாட்டில் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையும் மனித பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், கோவாக்ஸின் (Covaxin) மருத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மக்களும் கோவாக்ஸின் மருத்துவ பரிசோதனை நல்ல முறையில் வெற்றி பெற வேண்டுமென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவாக்ஸின் மருந்தை ஹைதரபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள நெமிலியை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி எல்லா என்பவர்தான் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.

இவரை, சுருக்கமாக கிருஷ்ணா எல்லா என்று அழைப்பார்கள். கிருஷ்ணா எல்லாவின் தாய் மொழி தெலுங்கு. அமெரிக்காவில் ஹவாய் பல்கலையில் எம்.எஸ் பட்டமும் தொடர்ந்து பி.ஹெச்.டி பட்டம் பெற்ற பிறகு அங்கேயே பணியாற்றி வந்தார்.

அமெரிக்காவில் பணி புரிந்து வந்த கிருஷ்ணா எல்லா தமிழகம் திரும்பிய பிறகு தொழில் முனைவராக மாறினார் . தற்போது, இந்த நிறுவனத்தில் 1,600 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ரேபிஸ் நோய்க்கு இந்த நிறுவனம்தான் உலகளவில் அதிகளவில் மருந்தை உற்பத்தி செய்கிறது. உலகத்தின் 65 மருந்துகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் காப்புரிமையை வைத்துள்ளது.

image

டாக்டர் கிருஷ்ணா எல்லாவின் மனைவி பெயர் சுசித்ரா. இந்த தம்பதிக்கு ரிகாஸ் வீர தேவ் என்ற மகன் உண்டு. மகள் ஒருவரும் இருக்கிறார். மிகப் பெரிய மீடியா நிறுவனமான ஈநாடு பத்திரிகை அதிபர் கிரண் மகள் சஹாரியை ரிகாஸ் வீரதேவ் மணந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பிறந்தாலும் ஆந்திர மாநிலத்தில்தான் கிருஷ்ணா எல்லா தொழிலை தொடங்கினார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கிருஷ்ணா எல்லாவுக்கு பக்க பலமாக இருந்தார். இதனால், 1996- ம் ஆண்டு ஹைதரபாத்தில் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் பாரத் பயோடெக் நிறுவனம் தொடங்கப்பட்டது.

கிருஷ்ணா எல்லாவின் மனைவி சுசித்ரா பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். சுசித்ரா அளித்த ஊக்கத்தின் பேரில்தான், பாரத் பயோடெக் நிறுவனத்தன் ஆராய்ச்சியாளர் கொரோனாவுக்கான மருந்தை அதி விரைவில் கண்டுபிடித்து சாதித்துள்ளனர்.

இதில், விசேஷம் என்னவென்றால், சுசித்ரா மருத்துவம் படித்தவர் இல்லை. சென்னை பல்கலையில் பி.ஏ பொருளாதாரம் படித்தவர். மருத்துவம் படிக்காவிட்டாலும் சுசித்ராவின் பொருளாதார அறிவு பாரத் பயோடெக் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிக்கரமாக இருக்கிறது.குறைந்த செலவில் சர்வதேச தரத்திலான மருந்துகளை உற்பத்தி செய்வதுதான் என் இலக்கு என்று சுசித்ரா கூறுவது உண்டு.சுசித்ராவின் தந்தை நெய்வேலி என்.எல்.சியில் பணி புரிந்து வந்தார். சுசித்ரா பள்ளி படிப்பை அங்கேதான் படித்துள்ளார். பிறகு, சென்னை பல்கலையில் பட்டம் பெற்றார். 

image

கோவாக்ஸின் மருந்து கண்டுபிடித்த விதம் குறித்து சுசித்ரா கூறியதாவது, '' கடந்த 2 மாதத்துக்கு முன்னாடியே கோவாஸ்ஸின் மருந்தை கண்டுபிடித்து விட்டோம். இந்திய மருத்துவ ஆராய்ச்சிகழகம் புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் மற்றும் பாரத் இன்ஸ்டிடியூட் நிறுவனங்கள் இணைந்து இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளோம். கொரோனா வைரஸில் உள்ள குண்டூசி போன்ற புரோட்டின் பாகம்தான் கோவாக்ஸின் மருந்தை கண்டுபிடிக்க முக்கிய உதவியாக இருந்துள்ளது.

பல கட்டங்கள் ஆய்வுக்கு பிறகு, மிகுந்த ரிஸ்க் எடுத்து கோவாக்ஸின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு சாம்பிள்கள், முதல் கட்ட அறிக்கையை அனுப்பி வைத்தோம். தொடர்ந்து, இந்திய டிரக்ஸ் கண்ட்ரோல் ஜெனரல் எங்களுக்கு இந்த மருந்தை சிறிய விலங்குகளித்தில் பரிசோதிக்க அனுமதியளித்தது.

அதிலும் நல்ல வெற்றி கிடைத்தையடுத்து , தொடர்ந்து மனிதர்களிடத்தில் பரிசோதனையை தொடங்கவிருக்கிறோம். மனிதர்களிடத்தில் நடத்தப்படும் பரிசோதனை நிச்சயம் நல்ல பலனளிக்கும் என்று நம்புகிறேன் ''என்று தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற வாழ்த்துகள்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments