கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள எடைக்கற்கள், நீள்வடிவ பச்சை வண்ண பாசிகள்
கீழடி அகழாய்வில் எடைக்கற்களும், அகரம் அகழ்வாய்வில் நீள வடிவ பச்சை வண்ண பாசிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
6ஆம் கட்ட அகழாய்வு, கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று வருகிறது. ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சி, தற்போது கீழடியில் கண்டறியப்பட்டுள்ளது. அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழியில், இரும்பு உலை அமைப்பு ஒன்றும் வெளிப்பட்டுள்ளது.
கீழடி அகழாய்வுப் பகுதியானது தொழிற்சாலையாக இருந்தது என கருதப்படும் நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பு மற்றும் இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி, மூலப்பொருளிலிருந்து உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியவை தொழில் கூடம் செயல்பட்டதற்கு ஆதாரமாக திகழ்கிறது. இதேபோல, பல்வேறு அளவுகளில் கருங்கல்லில் ஆன நான்கு எடைக்கற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அடிப்பகுதி தட்டையாக, உருளை வடிவில் அமைந்துள்ள இந்த எடைக்கற்கள் முறேயே 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டுள்ளன. இதன் மூலம் அப்பகுதியில் வணிகம் நடைபெற்றுள்ளது என்பதை உறுதி செய்ய முடிகிறது. அதே போன்று அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாய்வு நடைபெற்று வருகின்றன.
அகரத்தில் நீள வடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை அகழாய்வுகளில் வட்ட மற்றும் உருண்டை வடிவ பாசிகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்ட நிலையில் முதன்முறையாக நீள்வடிவ பாசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வகை பாசிகளை வியாபாரிகள், செல்வந்தர்கள் கழுத்தில் அணிந்திருக்கலாம் என்றும், ராஜஸ்தான் மாநிலத்தில் இதுபோன்ற பாசிகள் பயன்பாட்டில் இருந்துள்ளன என்றும் தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.
Comments