கதறி அழுத வாட்ஸ்ஆப் போராளி..!
திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சரிவர கவனிக்கப்படுவதில்லை என வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ஒருவர் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோவில் பதிவான பெண் ஒருவர், தனது அனுமதியின்றி தன்னை படமெடுத்துவிட்டதாக போலீசில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து அந்த நபருக்கு போலீசார் சம்மன் அனுப்பவே, தான் தெரியாமல் தவறு செய்துவிட்டதாக அழுது புலம்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் கண்ணன் என்பவர் 3 நாட்களுக்கு முன் தனது மனைவியை கொரோனா பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள ஊழியர்கள் நோயாளிகளை சரிவர கவனிப்பது இல்லை, வார்டில் செவிலியர்கள் இல்லை எனக் கூறியவாறு கொரோனா வார்டை வளைத்து, வளைத்து வீடியோ எடுத்துள்ளார்.
அந்த நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரும் அவரது 6 வயது மதிக்கத்தக்க மகனும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களையும் தனது வீடியோவில் பதிவு செய்த ஸ்ரீராம் கண்ணன், சமூக அக்கறையோடு “அவர்களை ஏன் வெளியே நிறுத்தி வைத்திருக்கிறீர்கள், உடனடியாக சிகிச்சை அளியுங்கள்” என மருத்துவமனை ஊழியர்களிடம் புரட்சி பேசியுள்ளார்.
பிறகு தனது மனைவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு வீட்டுக்கு வந்தவர், உடனடியாக தாம் எடுத்த வீடியோவை வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். கடந்த 3 நாட்களில் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவ, வீடியோவில் மகனுடன் பதிவான அந்தப் பெண்ணுக்கு சிக்கல் உருவாகி இருக்கிறது.
வீடியோவைப் பார்த்த அந்தப் பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் பலரும் பல ஊர்களில் இருந்து அவரை போனில் அழைத்து நலம் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல் நிலையத்தில் இருந்து ஸ்ரீராம் கண்ணனுக்கு விசாரணைக்கான சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போன் மூலமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதனால் பயந்துபோன ஸ்ரீராம் கண்ணன் தாம் வீடியோ எடுத்து பதிவிட்டது தவறுதான், தன்னை ஒன்றும் செய்துவிட வேண்டாம் எனக் கெஞ்சி அழுதவாறு மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவல் தீவிரமாகியுள்ள தற்போதைய சூழலில் தங்கள் உயிரையும் குடும்பத்துடனான பிரிவையும் பொருட்படுத்தாமல் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் மருத்துவமனையின் செயல்பாடுகளில் குறைகள் ஏதேனும் இருப்பின், முறைப்படி உயர் அதிகாரிகளையோ, மாவட்ட நிர்வாகத்தையோ அணுகி புகாரளிக்கலாம்.
அதனை விடுத்து இதுபோன்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது சுய விளம்பரம் என்று மட்டுமே பார்க்கப்படும். அதே நேரம், கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை அவர்களையுடைய அனுமதி இன்றி புகைப்படம் எடுப்பதோ, அதிலும் குறிப்பாக 18 வயதுக்கு உட்பட சிறுவர், சிறுமிகளை வீடியோ எடுப்பதோ சட்டப்படி குற்றம் என்கின்றனர் போலீசார்.
Comments