'பிடிக்காதவர்களுக்கு எதிரிகள்; போலீஸாருக்கு மட்டும் நண்பர்கள்!'- ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸின் முழு பின்னணி
சாத்தான்குளம் சம்பவத்தையடுத்து, ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸாருடன் சேர்ந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்த இளைஞர்களும் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், குற்றச்சாட்டை இந்த அமைப்பின் நிர்வாகி லூர்துசாமி மறுத்துள்ளார். 'சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் கொரோனா தொடர்பான பணிகளில் ஈடுபட்ட இளைஞர்கள்தான் இருந்துள்ளனர். அவர்கள் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை' என்று லூர்துசாமி கூறியுள்ளார். இந்த நிலையில், விழுப்புரம், திருச்சி, மதுரை , தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்துள்ளது.
சரி ... இந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு என்றால் என்ன... இந்த அமைப்பு உருவானது எப்படி?
தமிழக சி.பி.சி.ஐ.டி கிராம் பிராஞ்ச் டி.ஜி.பி யாக இருந்த பிரதீப் வி.பிலிப் என்பவரின் ஐடியாவில் உதித்ததுதான் இந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு. அரசுடன் கூட்டு சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஆகும். 1993- ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் இந்த அமைப்பு முதன்முறையாக தொடங்கப்பட்டது. இந்த மாவட்ட எஸ்.பி- யாக பிரதீப் வி. பிலிப் பணியாற்றிய போது, ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை தொடங்கினார்.
போலீஸின் அதிகாரத்தை மக்களுக்கும் பங்கீட்டு கொடுப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். சில மாதங்களிலேயே 1000 - க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராமாநதபுரம் மாவட்டத்தில் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். பிறகு, 94- ம் ஆண்டில் தமிழகம் முழுவதுமே ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. பல்வேறு சமூகப்பணிகளில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டாலும், குற்றச் செயல்களை தடுக்க உதவுவது, குற்றச் செயல்கள் குறித்து பற்றி போலீஸாருக்கு தகவல் கொடுப்பது போன்ற பணிகள்தான் முக்கியமானது. தற்போது, தமிழகம் முழுவதுமே லட்சக்கணக்கான இளைஞர்கள் ஃப்ரண்ட்ஸ் ஆஃப்போலீஸ் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.சென்னையில் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தர்மா டவரில் இந்த அமைப்பின் தலைமையகம் உள்ளது.
ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பின் முக்கிய பணிகள்
போக்குவரத்தை கட்டுப்படுத்துவது, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்
அடுத்தவர்களுக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டும்.
அமைப்பின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். நேர்மை தவறாமல் காலம் தவறாமல் இருத்தல் வேண்டும்
குற்ற செயல்களை தடுக்க போலீசுக்கு உதவ வேண்டும்
லா ஆண்டு ஆர்டரை பாதுகாக்க உதவ வேண்டும்.
கிராமங்களில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க போலீஸ் அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
எப்போது அழைத்தாலும் பணிக்கு தயாராக இருக்க வேண்டும்
சமூகப்பணிகளில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்.
ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் செய்ய கூடாதவை...!
போலீஸ் நிலையத்துக்கு ரெக்கமெண்டேசனுடன் போக கூடாது
சட்டத்துக்கு விரோதமான எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது
எந்த சண்டை , சச்சரவுகளிலும் ஈடுபடக் கூடாது.
எந்த போலீஸ் அதிகாரியையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது.
நாட்டுக்கு எதிரான எந்த போராட்டத்திலும் பங்கேற்க கூடாது
மது, சிகரெட் போன்ற பழக்கங்கள் இருக்க கூடாது.
ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் உறுப்பினர் என்ற அடையாளத்தை தவறாக பயன்படுத்த கூடாது.
நன்கொடை, நிதி திரட்டல் கூடாது
ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸின் கொள்கைளுக்கு ஏற்றபடி வாழ்தல் வேண்டும்.
போலீஸ் மற்றும் பொதுமக்களுக்கிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்துவதுதான் இந்த அமைப்பின் முக்கியமான நோக்கம். ஆனால், நெருக்கத்தை உருவாக்குவதற்கு பதிலாக பொதுமக்களுக்கும் போலீசுக்குமிடையே பிணக்கத்தை ஏற்படுத்துவதுதான் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் உறுப்பினர்கள் முக்கிய வேலையாக இருப்பதாக சொல்லப்படுகிறது. போலீஸ் அதிகாரிகளுடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வது, பிடிக்காதவர்களை போட்டுக் கொடுப்பது போன்ற வேலைகளிலும் ஃப்ரண்ஸ்ட் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் செய்து வருவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். அதேபோல், தனக்கு போலீஸ் அதிகாரிகளிடத்திலுள்ள நெருக்கத்தை பயன்படுத்தி கிராமங்களில் மினி போலீஸ் போல வலம் வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகளும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மீது இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு உறுப்பினர்களுக்கும் தகுந்த கடிவாளம் போட வேண்டுமென்பதே தமிழக மக்களின் இப்போதைய முக்கிய கோரிக்கையாக இருந்தது. தமிழக மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் 11 மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களில் தடை விதிக்கப்படும் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம்.
ராமநாதபுரத்தில் தோன்றிய ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்; தமிழகம் முழுவதும் 'மினி ' காவலர்கள் பரவியது எப்படி?#friendsofpolice #Sathankulam #JeyarajandBeniks https://t.co/LX9JzC1tRq
— Polimer News (@polimernews) July 4, 2020
Comments