ஜூம் செயலிக்கு போட்டியாக, முகேஷ் அம்பானி நிறுவனத்தின் ஜியோமீட் அறிமுகம்
ஜூம் செயலிக்கு போட்டியாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம், ஜியோமீட் எனப்படும் வீடியோகான்ஃபரன்ஸ் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் உள்ளிட்ட சேவைகளைப் போலவே, ஜியோமீட் செயலி மூலம், ஹெச்டி தரத்திலான வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அதேசமயம், ஜூம் செயலி போல, 40 நிமிடங்கள் என்ற நேர வரம்பு இதில் இல்லை. 24 மணி நேரத்திற்கு கூட வீடியோ அழைப்புகளை நீட்டிக்கலாம்.
ஜியோமீட் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து டிஜிட்டல் சந்திப்புகளுக்கும் பாஸ்வேர்டு மற்றும் என்கிரிப்சன் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுவதாக அதன் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோமீட்டை, கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கிக் கொள்ளலாம். ஏற்கெனவே அது லட்சம் பதிவிறக்கங்களை கடந்துவிட்டது. ஜியோமீட் அறிமுகம், மேட் இன் இந்தியா என்ற ஹேஷ்டேக்கில் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஃபேஸ்புக் மற்றும் இன்டல் நிறுவனங்களின் பில்லியன் கணக்கிலான டாலர்களை முதலீட்டை தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிஜிட்டல் சாம்ராஜ்யத்தையும் விரிவுபடுத்தி வருகிறது.
Comments