தந்தை, மகன் கொலை வழக்கு... ! விரிவடையும் விசாரணை.. ! தேடப்பட்ட முத்துராஜ் கைது

0 2910

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கடந்த 2 நாட்களாக தேடப்பட்ட காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் நேரடி சாட்சியாக உள்ள தலைமை காவலர் ரேவதி, ஏற்கனவே நீதிபதி பாரதிதாசனிடம் சாட்சியம் அளித்துள்ள நிலையில், தூத்துக்குடி முதன்மை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன் ஆஜராகி சுமார் 5 மணி நேரம் சாட்சியம் அளித்தார்.

பின்னர் நீதிமன்றத்தில் இருந்து தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் அழைத்து செல்லப்பட்டார். அங்கு ரேவதியிடம் நடந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி ஐஜி சங்கர் மற்றும் விசாரணை அதிகாரி அனில் குமார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசனும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். ஜூன் 19ஆம் தேதியன்று, வேறொரு வழக்கிற்காக, சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்ற வழக்கறிஞர்களான கார்த்தீசன் மற்றும் அலெக்சாண்டரிடம், திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.

போலீசார் ஜெயராஜை அடித்து இழுத்துச் சென்றதை பார்த்ததாகவும், ஜெயராஜை போலீசார் அடித்ததை தடுத்த போது தன்னை கீழே தள்ளிவிட்டுச் சென்றதாகவும் வழக்கறிஞர் கார்த்தீசன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயராஜ்-பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட போது அங்கு இருந்த அலெக்சாண்டர் என்ற வழக்கறிஞரும், நீதிபதி பாரதிதாசனிடம் சாட்சியம் அளித்தார்.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சம்பவத்தன்று செவிலியராக பணிபுரிந்த கிருபை என்பவரும் நீதிபதி முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது மருத்துவமனைக்கு 2 பேரையும் போலீசார் கூட்டி வந்தபோது இருவருக்கும் உடலில் ரத்த காயங்கள் இருந்ததாக செவிலியர் கிருபை, தெரிவித்துள்ளதாக, சொல்லப்படுகிறது.

இதேபோல் சாத்தான்குளம் நீதிமன்றத்திலிருந்து கோவில்பட்டி சிறைச்சாலைக்கு ஜெயராஜையும், பெனிக்சையும் தனியார் வாகனத்தில் அழைத்துச்சென்ற வாகன ஓட்டுனர் நாகராஜ் என்பவரும் விசாரணைக்கு ஆஜரானார்.

தந்தை, மகன் இருவரும் காலில் அடிபட்டது போல் நடந்து வந்தனர் என்றும், வாகனத்தில் வரும்போது இருவரும் விரைவில் வழக்கறிஞர்கள் மூலம் ஜாமீன் எடுக்க வேண்டுமென்றும் பேசிக் கொண்டதாகவும் நாகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அவர்களை கோவில்பட்டியில் இறக்கிவிட்ட போது காரின் பின் சீட்டில் உள்ள பெட்சீட்டில் ரத்தக்கறை இருந்ததாகவும், இதேபோல் சீட்டின் இருக்கையிலும் லேசான ரத்தக் கறை இருந்ததாகவும் ஓட்டுனர் நாகராஜ் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கடந்த 2 நாட்களாக தேடப்பட்ட காவலர் முத்துராஜ், விளாத்திகுளம் அருகே முள்ளூர் காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். முன்னதாக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழ மங்கலம் கிராமத்தில் காட்டுப் பகுதியில் முத்துராஜின் இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments