சாத்தான்குளம் சம்பவத்தில் காவலர் முத்துராஜ் மீது கொலை வழக்குப்பதிவு

0 13455

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர் முத்துராஜ், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். 

ஒட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் அருகே காட்டுப் பகுதியில் நேற்று அவரது இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு இரவில் தமது இருசக்கர வாகனத்தை அங்கு விட்டுவிட்டு, இரவு நேரத்தில் கீழமுடிமன் பகுதியில் இருந்து  சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று, விளாத்திகுளம் அருகே  உள்ள முள்ளூர் காட்டு பகுதியில் முத்துராஜ் பதுங்கியதாக கூறப்படுகிறது- அங்கேயே இரண்டு நாட்களாக சாப்பிடாமல் முள் காட்டில் பதுங்கி இருந்ததாகவும் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் ஒருவரிடம் செல்போனை வாங்கி அரசன்குளத்தில் இருக்கும் உறவினர் முனியசாமியை முத்துராஜ் தொடர்புகொண்டு உதவி கோரியதாகவும் சொல்லப்படுகிறது.

முள்ளூர் காட்டுபகுதியில் பதுங்கி உள்ள தன்னை இரவில் வந்து அழைத்துச் செல்லுமாறு முத்துராஜ் கேட்டதாகவும், இதனை அடுத்து முனியசாமியும் அங்கு சென்று அவரை அழைத்துக் கொண்டு பூசனூரில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அங்கு உணவு சாப்பிட்ட பின்னர், போலீசார் தீவிரமாக தேடி வருவதையும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்து வருவதையும் எடுத்துக் கூறிய முனியசாமி, சரணடைந்து விடுமாறு முத்துராஜூக்கு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதன் பிறகு குளத்தூர் உளவுத்துறை காவலர் டேனியலிடம் தகவல் தெரிவிக்கப்பட, குற்றப்பிரிவு ஆய்வாளர் ராமலெட்சுமிக்கு டேனியல் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், இரவு 9 மணியளவில் காவலர் முத்துராஜை பூசனூரில் கைது செய்தனர். 

இதனிடையே, கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜை, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார், மருத்துவ  பரிசோதனை செய்தனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி முதன்மை குற்றவியல்  நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில், முத்துராஜை ஆஜர்படுத்தினர். 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, முத்துராஜ் தூத்துக்குடி அருகே பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments