பாகிஸ்தான், சீனாவில் இருந்து மின்கருவிகளை இறக்குமதி செய்ய வேண்டாம்
மின்துறைக்குத் தேவையான கருவிகளைச் சீனாவில் இருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் இறக்குமதி செய்ய வேண்டாம் என அரசுத் துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்வன் மோதலுக்குப் பின் சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற கருத்து இந்தியாவில் மேலோங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் மாநில மின்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது.
அதன் பின் பேசிய அமைச்சர் ஆர்.கே.சிங், மின்துறைக்குத் தேவையான கருவிகளைச் சீனாவில் இருந்தும், பாகிஸ்தானில் இருந்தும் இறக்குமதி செய்யக் கூடாது என அரசுத் துறை நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.
மின்துறைக்குத் தேவையான கருவிகளை உள்நாட்டிலே தயாரிப்பதை ஊக்கப்படுத்தி, இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையாக ஆகஸ்டு 1 முதல் இறக்குமதிக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படுவதாகவும், அடுத்த ஆண்டு முதல் இறக்குமதி வரி 40 விழுக்காடாக உயர்த்தப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
Comments