கேரளாவில் ஹை ஸ்பீட் ரயில் : 2000 வீடுகளை பெயர்த்து வேறு இடத்துக்கு நகர்த்த திட்டம்
திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே செயல்படுத்தப்படவுள்ள செமி ஹை ஸ்பீட் ரயில் திட்டப் பணிகளுக்காக, நவீனத் தொழில்நுட்பத்தில், 2000 வீடுகளை இடிக்காமல், அப்படியே நகர்த்தி வைக்கத் திட்டமிட்டுள்ளது, கேரளா அரசு.
கேரளாவின் தெற்கிலுள்ள திருனந்தபுரம் வட பகுதியில் உள்ள காசர்கோடு நகரங்களை இணைக்கும் வகையில் 531 கி.மீ தொலைவில் ரூ.56,000 கோடி மதிப்பீட்டில் செமி ஹை ஸ்பீட் ரயில் இயக்க திட்டமிட்டு, இதற்கான பணிகளில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த செமி ஹை ஸ்பீட் ரயில் பாதை 11 மாவட்டங்களில் உள்ள 10 ரயில்வே நிலையங்களை இணைக்கிறது. இதற்காக 1200 ஹெக்டேர் பரப்புள்ள நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. செமி ஹை ஸ்பீடு பாதையில் செல்லும் ரயில்கள் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்ல முடியும்.
இந்தத் பாதையில் செல்லும் வழியில் 20,000 வீடுகள் உள்ளன. இதில், 2000 வீடுகளை அப்படியே நகர்த்தி வேறு இடத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் இந்தத் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு வீடுகள் வெற்றிகரமாக நகர்த்தி வைக்கப்பட்டன. அதே தொழில்நுட்பத்தை கொண்டு கேரளாவிலும் வீடுகள் பாதுகாப்பாக நகர்த்திவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நகர்த்தப்படும் வீடுகளுக்கு 20 வருடங்கள் உத்திரவாதமும் இன்சூரன்சும் அரசு தரப்பில்செய்து கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் விதத்தில் சர்வதேச அளவில் டெண்டர் கோரவுள்ளது கேரளா ரயில் மேம்பாட்டுக் கழகம். நியூமேட்டிக் ஜாக்கிகள் மூலம் வீடுகள் அஸ்திவாரத்தோடு உயர்த்தப்பட்டு, வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன. பணியின் போது அனைத்து ஜாக்கிகளும் கணினிகள் மூலம் கட்டுப்படுத்தப்படும்.
கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலிருந்த வீடுகளின் அஸ்திவாரங்கள் சேதமாகின. அப்போது, ஜாக்கிகள் மூலம் வீடுகளின் அஸ்திவாரம் உயர்த்தப்பட்டு சேதம் சரி செய்யப்பட்டன.
Comments