பங்களாவுக்கு ஒரு வருடம் வாடகை பாக்கி! - செலுத்தாத நிலுவையை ஒரே நாளில் கட்டிய பிரியங்கா
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் பிரியங்கா காந்திக்கு, டெல்லியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் இருந்ததால், அவர்களுக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த 7 மாதங்களுக்கு முன் ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டது.
பிரியங்கா காந்தி எந்த அரசு பதவியில் இல்லாத காரணத்தினாலும், எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டதாலும் டெல்லி லோகி பகுதியில் ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யுமாறு அவருக்கு மத்திய அரசு நோட்டீஸ் விநியோகித்தது. மேலும், இத்தனை ஆண்டு காலம் வாடகை பாக்கி ரூ. 3.46 லட்சத்தை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
டெல்லியில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பங்களா 2,765.18 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதற்கு குறைந்த வாடகையாக மாதம் ரூ. 37,400 வாடகையாக வசூலிக்கப்பட்டது. இதே போன்ற வீட்டில் வசிக்க சாதாரண மனிதர்கள் என்றால் ரூ. 20 லட்சம் வாடகை செலுத்த வேண்டியது இருக்கும். 2003- ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி காலத்தில் இதே போன்ற பங்களாவுக்கு ரூ. 8,888 வாடகையாக பெறப்பட்டது. ஆண்டுக்கு ரூ. 1,700 வாடகை உயர்த்தப்பட்டு தற்போது ரூ.37, 400 என உயர்த்தப்பட்டுள்ளது. இதிலும் கடந்த ஒரு வருட காலமாக பிரியங்கா வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 1-ந் தேதி இந்த பங்களாவை காலி செய்ய வேண்டும். அதற்கு முன் வாடகையை செலுத்தி விடுமாறு, மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் பிரியங்காவுக்கு நோட்டீஸ் அளித்தது. தொடர்ந்து நேற்றே வாடகை பாக்கி கட்டணமாக ரூ. 3.46 லட்சத்தை உடனடியாக பிரியங்கா காந்தி செலுத்தி விட்டார். உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள தன் உறவினருக்கு சொந்தமான கவுல் பங்களாவில் பிரியங்கா காந்தி குடியேறப் போகிறார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரன்தீப் சர்ஜேவாவா கூறுகையில், ''காங்கிரஸ் கட்சித் தலைவர்களை பா.ஜ.க மற்றும் மோடி அரசு கண்மூடித்தனமான வெறுப்பும் பழிவாங்கும் உணர்வையும் காட்டுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. சர்வாதிகார அரசாங்கத்தின் இது போன்ற முடிவுகளை கண்டு நாங்கள் பயப்படவில்லை ”என்று தெரிவித்துள்ளார்.
Comments