ஐந்து வங்கிகளில் ரூ.350 கோடி மோசடி... புகாரளிக்க தாமதித்த அதிகாரிகள்! - கனடாவுக்குத் தப்பிய அரிசி வியாபாரி

0 5168

பஞ்சாப்பைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கனரா வங்கி உட்பட ஐந்து வங்கிகளில் ரூ.350 கோடிக்கும் மேல் மோசடி செய்து, கனடா நாட்டுக்குத் தப்பிச் சென்ற தகவல் வெளியாகி உள்ளது. வங்கித் தரப்பில், சரியான நேரத்தில்  புகார் அளிக்காத காரணமே தொழிலதிபர் தப்பிச் செல்ல காரணமாக அமைந்தது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் நிறுவனத்தின் இயக்குனர் மன்ஜித் சிங் மக்னி, இவரின் மகன் குவிந்தர் சிங்  மக்னி  மருமகள் ஜாஸ்மீட் கௌர் ஆகியோர் வங்கி அதிகாரி ஒருவருடன் சேர்ந்து ஆறு வங்கிகளில் ரூ.350 கோடி அளவுக்குக் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். போலியான இன்வாய்ஸ் மற்றும் ஆவணங்கள் கொடுத்து கனரா வங்கியில் ரூ.175 கோடியும், ஆந்திரா வங்கியில், ரூ.53 கோடியும், யூனியன் வங்கியில் ரூ.44 கோடியும், ஓரியண்டல் வங்கியில் 25 கோடியும், ஐடிபிஐ வங்கியில் ரூ.14 கொடியும், யுசிஓ வங்கியில் 41 கோடியும் கடன் பெற்றுள்ளனர்.

image

வங்கிகளில் கடன்பெற்றுக்கொண்டு, அந்த வங்கிகளின் ஒப்புதலைப் பெறாமலே தன்னுடையநிறுவனத்தின் பங்குகளை விற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

மோசடிகுறித்த சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில், ’2018 மார்ச் - ஏப்ரல் மாதத்திலிருந்தே பஞ்சாப் பாஸ்மதி அரிசி நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் எந்தவிதமான பரிவர்த்தனைகளிலும் ஈடுபடாமல் இருந்தன (non-performing asset)’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மோசடி குறித்த முதல்கட்ட விசாரணையில் வங்கித் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட காலதாமதமான நடவடிக்கையே மோசடிக்காரர்கள் கனடாவுக்குத் தப்பிச்செல்ல காரணம் என்று சொல்கிறார்கள் சிபிஐ அதிகாரிகள். மார்ச் மாதம் 11 - ம் தேதி இந்த மோசடி குறித்த புகார் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் பேங்க் தரப்பில் சிபிஐ- ல் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி மார்ச் 30, 2019 ம் தேதி வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி உத்தரவிட்ட பிறகும், கிட்டத்தட்ட 15 மாதங்கள் கழித்தே  வங்கித் தரப்பில் சிபிஐ -யை அணுகி புகார் கொடுத்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையும் சமீபத்தில் தான் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த 15 மாத இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட மோசடிக்கார தொழிலதிபர் குடும்பத்துடன் கனடா நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments