'ஆகஸ்ட் 15- க்குள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி' - நம்பிக்கை தரும் ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியா அதில் ஒரு படி முன்னேறியுள்ளது. தற்போது, பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த கோவாக்ஸின் தடுப்பூசி கிளினிக்கல் ட்ரையல்கள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இதன் பரிசோதனைகள் முடிந்து விடும் என்றும் ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் பொதுமக்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் அறிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் டைரக்டர் ஜெனரல் பலராம் பர்கவா வெளியிட்டுள்ள அறிக்கையில்'' அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்தபின் ஆகஸ்ட் 15 - ந் தேதிக்குள் பொது சுகாதார பயன்பாட்டிற்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவாக்ஸின் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ சோதனையில் கிடைக்கும் முடிவுகளை ஆராய்ந்து கோவாக்ஸின் மருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த மருந்து முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பு . புனேவின் ஐ.சி.எம்.ஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் SARS-CoV-2- ன் திரிபுவிலிருந்து இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்ஸின் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை புவனேசுவரில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் எஸ்.யு.எம் மருத்துவமனைகளில் நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் முடிவு செய்துள்ளது. இது தவிர விசாப்பட்டினம், ரோடக், புதுடெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கோரக்பூர் , காட்டாங்குளத்தூர்( சென்னை) ஹைதரபாத், கோவா, கான்பூர்,ஆர்யா நகர் போன்ற இடங்களிலுள்ள மருத்துவமனைகளில் கிளினிக்கல் ட்ரையல்ஸ் நடத்தப்படவுள்ளது.
இந்திய அரசின் மிக முக்கியமான முன்னுரிமை திட்டமாக கோவாக்ஸின் தடுப்பூசி மருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக , பாரத் பயோடெக் நிறுவனமும் முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறது.பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி கோவாக்ஸின் மருந்து குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் தகவல்கள் இருக்கின்றன.
இதுவரை,இந்தியாவில் 6 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 19,148 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ICMR-Bharat Biotech COVID-19 vaccine trial results to be released by August 15
— ANI Digital (@ani_digital) July 3, 2020
Read @ANI Story | https://t.co/LNoqdgXDQ4 pic.twitter.com/ttiTxuegE7
Comments