ரூ.2 கோடி கேட்டு கடத்தல்.. தொழில் அதிபர் கொலை.. சடலம் கிடைக்கவில்லை..! ஆற்றுக்குள் தேடும் போலீஸ்
கந்தர்வகோட்டை அருகே 2 கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட தொழில் அதிபர் கொலை செய்து ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த வெள்ளாள விடுதியை சேர்ந்தவர் தவமணி. இவர் பிரபல ஜவுளி நிறுவனங்களுக்கு மரத்தால் உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.
பங்களா போன்ற வீட்டில் வசித்து வந்த தவமணி 18 ந்தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வயலுக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வீடுதிரும்பாத நிலையில் அவரை தேடியுள்ளனர் .ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 19 ந்தேதி தவமணியை கடத்தி வைத்திருப்பதாகவும், 2 கோடி ரூபாய் பணம் வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினரிடம் குறுந்தகவல் மூலம் மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தவமணி குடும்பத்தினர் கந்தர்வக் கோட்டை போலீசில் புகார் அளித்தனர். காவல் கண்காணிப்பாளர் அருன் சக்திகுமார் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைத்து காவல்து றையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் அவரது தொழில் முறை போட்டியாளரான கமலக்கண்ணன் என்பவர் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தவமணி மாயமான சம்பவத்தின் மர்மம் விலகியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 18 ந்தேதி இருசக்கரவாகனத்தில் சென்ற தவமணியை மறித்து ஆம்னிவேனில் கடத்திச்சென்று மிரட்டியதும், உஷாரான உறவினர்கள் போலீசிடம் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தவமணியை கொலை செய்து சடலத்தை கல்லணை அருகே ஆற்றில் வீசிச்சென்றது தெரியவந்தது. மேலும் அவரது இருசக்கர வாகனத்தையும் அதே இடத்துக்குள் வீசிச்சென்றதையும் கண்டறிந்த போலீசார் அதனை மீட்டனர்.
தவமணியின் சடலத்தை போலீசார் தொடர்ந்து தேடிவருகின்றனர். இந்த நிலையில் தவமணியிடம் கோடிக் கணக்கில் ஹவாலா பணம் இருப்பதாக பரவிய தகவலின் அடிப்படையில் கமலக்கண்ணன் அவரைக் கடத்தி மிரட்டியதாகவும் பணம் கொடுக்காமல் காவல் நிலையம் சென்றதால் மாட்டிக் கொள்வோம் என பயந்து தவமணியை கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடையே, தொழிலதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 16 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மூவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேரை புதுகோட்டை சிறையில் அடைத்தனர். கைதான 16 வயது சிறுவன் திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான். திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஆற்றில் தீயணைப்பு மீட்புப் பணித் துறையினர் சடலத்தை தேடி வருகின்றனர்
Comments