கல்விக்கட்டணம் தொடர்பான வழக்கு : 70 விழுக்காடு கட்டணத்தைப் பெற அனுமதிக்கத் தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாக அரசு தகவல்
நடப்புக் கல்வியாண்டுக்கான மொத்தக் கல்விக் கட்டணத்தில் 70 விழுக்காட்டுத் தொகையை மூன்று தவணைகளில் பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனத் தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்தப் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறிக் கோபாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசாணையை மீறும் கல்வி நிறுவனங்கள் குறித்துப் புகார் அளிக்கத் தமிழக அரசு எந்தப் புகார் எண்களையும் அறிவிக்கவில்லை என மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 70 விழுக்காட்டுத் தொகையை 3 தவணைகளாகப் பெற அனுமதிக்க வேண்டும் எனத் தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.
Comments