குற்றம்சாட்டப்பட்ட போலீசார் துரத்தி துரத்தி கைது சினிமா பாணியில் சிபிசிஐடி நடவடிக்கை
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் நான்கு போலீஸ்காரர்களை சினிமா பாணியில் தேடுதல் வேட்டை நடத்தி சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லையில் இருந்து தேனிக்கு தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை நெல்லை டிஐஜி பிரவீண் குமார் அபினபு தலைமையிலான போலீசார் துரத்திச் சென்று பிடித்து சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவர் என்கிற அடிப்படையில் உதவி ஆய்வாளர் ரகு கணேசை விசாரணைக்கு சிபிசிஐடி போலீசார் வரவழைத்துள்ளனர். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று மாலை 6 மணி அளவில் வந்த ரகு கணேசிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதன் அடிப்படையில் அவரை கைது செய்ததாக சிபிசிஐடி அறிவித்தது.
ஆனால் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் விசாரணைக்கு வரவில்லை. இதனால் அவர் தப்பிச் சென்று நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோர வாய்ப்புள்ளதால், அவர் பெயரை வழக்கில் சேர்க்கவில்லை என்பது போல் சிபிசிஐடி போலீசார் தகவல்களை கசியவிட்டுள்ளனர். ஆனால் ரகு கணேஷ் கைது செய்யப்பட்ட தகவலை தொலைக்காட்சிகளில் பார்த்ததும், ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் தலைமறைவாகியுள்ளனர்.
அவர்கள் நீதிமன்றம் சென்று முன்ஜாமின் பெற முயற்சிக்க கூடும் என்பதால் அதற்கு முன்னதாக கைது நடவடிக்கையை மேற்காள்ள சிபிசிஐடி வியூகம் வகுத்துள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெயக்குமாரின் உதவியை சிபிசிஐடி போலீசார் நாடியுள்ளனர். இதன் அடிப்படையில், சாத்தான்குளம் வழக்கில் தொடர்புடைய எஸ்ஐகள், காவலர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் வாகன சோதனயை தீவிரப்படுத்துமாறும் போலீசார் வால்க்கி டாக்கி மூலம் சோதனைச்சாடிவகளில் உள்ள போலீசாரை உஷார்படுத்தினர்.
breath
இதன் அடிப்படையில் தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையே ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐ பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்றனர். ஆத்தூர் ஆவாரங்காட்டில் உள்ள எஸ்ஐ பாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற சிபிசிஐடி நடத்திய விசாரணையில் அவர் முதல் நாளே தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து தூத்துக்குடிக்கு சென்று போலீஸ் நடத்திய விசாரணையில் எஸ்ஐ பாலகிருஷ்ணன் தனது உறவினரின் செல்போன் சிம்கார்டை பெற்றுக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிம்கார்டை போலீசார் லொகேட் செய்த போது பாலகிருஷ்ணன் சிவகங்கை நோக்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று பாலகிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே மற்றொரு சிபிசிஐடி குழு, விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூரில் உள்ள காவலர் முருகன் வீட்டிற்கு சென்றுள்ளது. அங்கிருந்து அவர் அப்போது தான் தப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் உறவினர்கள் கொடுத்த தகவலின் மூலம் முருகனையும் போலீசார் கைது செய்து தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நெல்லையில் இருந்து தேனியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தப்பிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நெல்லை டிஐஜி பிரவீண் குமார் அபினபு தலைமையிலான போலீசார் ஸ்ரீதரை பிடிக்க துரத்திச் சென்றுள்ளனர். இறுதியாக கங்கைகொண்டான் சோதனைச்சாவடி அருகே அவரை மறித்து டிஐஜி பிரவீண் குமார் அபினபு பிடித்துள்ளார். முன்கூட்டியே இந்த தகவலை அறிந்த சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் அங்கு சென்று ஸ்ரீதரை கைது செய்து தூத்துக்குடிக்கு அழைத்து வந்தார்.
இப்படி சினிமாவில் வரும் காட்சிகளை போல் ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு போலீசாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதை உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியுள்ளது.
Comments