அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி கொடூர கொலை தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை

0 8769

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காணாமல் போன சிறுமி காயத்துடன் கண்மாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏம்பல் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த நாகூரான், மற்றும் அவருடைய 3ஆவது மனைவி செல்வி தம்பதியரின் மகளான 2ம் வகுப்பு மாணவியான 7 வயது சிறுமி நேற்று முன்தினம் திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து ஏம்பல் காவல்நிலையத்தில் நேற்று அவர் புகார் அளிக்கவே, சிறுமியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள கண்மாயில் இருந்து சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது சிறுமியின் உடலில் காயங்கள் இருந்துள்ளன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு கண்மாயில் வீசப்பட்டு இருப்பது உறுதியான நிலையில், அதற்கான காரணம், அவரை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. இதையடுத்து சிறுமியின் சடலம் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பப்பப்பட்டது. அங்கு சிறுமியின் உடலை உடல்கூராய்வு செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் ஊரை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் சிறுமியின் ஊரிலும் ஊர்கூட்டம் கூடி இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடல்கூராய்வு சுமார் மாலை 4 மணியளவில் முடிவடைந்தது.

இருப்பினும் அவரது சாவுக்கு காரணமான நபர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், 50 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டுமெனவும், அதன்பிறகே சிறுமியின் சடலத்தை வாங்க செல்வோம் என பெற்றோர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஏம்பல் மேலபுதுக்குடியிருப்பிலுள்ள சிறுமியின் வீடு அருகே பெற்றோர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.   அவர்களிடம் காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments