ஹெச் - 1 பி விசா தடை நீக்கம், தாராள குடியுரிமை... அள்ளி விடும் ஜோ பிடேன்

0 7781

ஹெச்1 பி விசா மீது விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிகத் தடையை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நீக்குவேன். உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும்  11 மில்லியன் பேருக்குக் குடியுரிமை வழங்குவேன்" என்று அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரும், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஜோ பிடன் தெரிவித்துள்ளார். 

கொரோனா நோய்த் தொற்று மற்றும் பொருளாதார பிரச்னைகளால் அமெரிக்கர்கள் அதிக அளவில் வேலை இழந்து வருகின்றனர். அமெரிக்கர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பு பெரும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப், H -1B விசா உள்ளிட்ட அனைத்துவித பணியாளர்களுக்கு வழங்கும் விசாக்களையும் 2020 - ம் ஆண்டு இறுதிவரை தடை விதித்தார். இந்தத் தடையால் இந்திய ஐடி நிறுவனங்களும், ஊழியர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், என்.பி.சி  நியூஸ் நிறுவனம் வாஷிங்டன்  டவுன் ஹாலில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜோ பிடன்  கலந்துகொண்டு பேசிய போது, 

"அமெரிக்க அதிபரான டொனாட் டிரம்ப்  H -1B விசா தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டித்துள்ளார். எனது நிர்வாகத்தில் இந்த தடை நீடிக்காது. வெளிநாடுகளிலிருந்து விசா பெற்று நம் நாட்டில் பணிபுரிபவர்கள் தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளனர். அமெரிக்காவின் வளர்ச்சிக்குத் துணை புரிந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் 1.10 கோடி  பேருக்குக் குடியுரிமை கிடைக்கும் வகையில், நான் பொறுப்பேற்ற முதல் நாளே குடியுரிமை மசோதாவைத் திருத்துவேன். ஆசிய, பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 17  லட்சம் பேரும் இந்த மசோதா மூலம் பயன்பெறுவார்கள். எனது குடியேற்றக் கொள்கை குடும்பங்களை ஒருங்கிணைப்பதாக இருக்கும் " என்று தெரிவித்தார்.

நவம்பர் 3 - ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.  இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் ஜோ பிடனுக்கும் கடுமையான போட்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.   அமெரிக்காவில் ஜோ பிடனின் செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்கின்றன கருத்துக்கணிப்புகள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments