மருத்துவ குணமிக்க உடன்குடி கருப்பட்டி... புவிசார் குறியீடு கோரும் மக்கள்!
கருப்பட்டி என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது உடன்குடி என்ற பெயர்தான். உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள் அந்த கிராம மக்கள்.
ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னமே புவிசார் குறியீடு (Geographical indication). இதன் அடிப்படையில், பன்ருட்டி பலாப்பழம், சேலம் மாம்பழம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது பனை தொழிலில் சிறந்து விளங்கும் உடன்குடி கிராமமும் பனைக் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கோரியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பேரூராட்சி, உடன்குடி. பனை ஏறுவது வெற்றிலை பயிரிடுவது உடன்குடி மக்களின் முக்கி வாழ்வாதாரம். பனையில் இருந்து கிடைக்கும் பதநீரை எடுத்துக் காய்ச்சுவதன் மூலம் தயாரிக்கப்படுவது கருப்பட்டி. பனைவெல்லம், கருப்புக் கட்டி, பனை அட்டு, பனாட்டு என்று பல்வேறு பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. கடைகளில் ‘உடன்குடி கருப்பட்டி’ கிடைக்கும் என்ற பெயர்ப்பலகையைப் பார்த்திருக்கலாம். தனித்துவமும், சுவையும் கொண்ட உடன்குடி கருப்பட்டி. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கருப்பட்டிக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. ரத்தத்தைச் சுத்திகரித்து, உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். சருமத்தைப் பளபளப்பாக்கும். பூப்பெய்திய பெண்கள் சாப்பிட்டால் ரத்தப்போக்கு கட்டுப்படும். எலும்புகள் மற்றும் கர்ப்பப்பை வலுப்பெறும். தற்போது, உடல் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருத்துவர்களும் சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பரிந்துரைக்கத் தொடங்கியுள்ளனர்.
சமீப காலத்தில், இயற்கையாக கிடைக்கும் பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதனால், சர்க்கரைக்குப் பதிலாக மக்கள் தற்போது அதிகளவில் கருப்பட்டி வெல்லத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் , உடன்குடி கிராம மக்கள் ‘உடன்குடி கருப்பட்டி’க்கு புவிசார் குறியீடு கோரியிருக்கிறார்கள். இதற்கான விண்ணப்பத்தையும் அனுப்பியுள்ளனர். புவிசார் குறியீடு கிடைத்த பிறகு, வளர்ச்சியே அதிகம் கிடைக்கும். மற்றவர்கள் அந்த யாரும் பயன்படுத்த முடியாது. அறிவுசார் சொத்துரிமை அந்த மக்களுக்கு மட்டுமே உரிமையாக இருக்கும். இதனால் போலிகள் தடுக்கப்படும். மற்றவர்கள் பயன்படுத்த தடை என்பதால் உடன்குடி மக்கள் மட்டுமே அந்த கருப்பட்டியை தயாரிக்க முடியும். வாடிக்கையாளர்கள் உண்மையான பொருளை வாங்கலாம். உண்மையாகத் தயாரிப்பவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.
Comments