டெல்லி பங்களாவை காலி செய்ய பிரியங்கா காந்திக்கு உத்தரவு! பாக்கி ரூ. 3.46 லட்சம் செலுத்த அறிவுறுத்தல்
அரசு பதவியில் இல்லாத பிரியங்கா காந்தியை டெல்லியில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. 7 மாதத்துக்கு முன், இவர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது. தற்போது இசட் ப்ளஸ் பாதுகாப்பு ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டு, இஸட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு கருதி கடந்த 1997- ம் ஆண்டு இவருக்கு டெல்லி 35 லோகி எஸ்டேட் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூலை 1-ந் தேதி முதல் பிரியங்காவுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களா ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 1- ந் தேதிக்குள் அந்த பங்களாவை காலி செய்ய மத்திய வீட்டு வசதி மற்றும் ஊரகத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த பங்களாவில் வசித்த வகைக்கு அரசுக்கு ரூ. 3.46 லட்சம் நிலுவையை பிரியங்கா காந்தி வைத்துள்ளார். இந்த தொகையை ஆன்லைனில் அவர் செலுத்த வேண்டும் . வீட்டை காலி செய்வதற்கு முன், பாக்கியை செலுத்தி விட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது எந்தவிதமான அரசு பதவியிலும் இல்லாத காரணத்தினாலும் இஸட் ப்ளஸ் பாதுகாப்பில் உள்ளவர்கள் அரசு பங்களாவில் வசிக்க முடியாது என்கிற ரீதியிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 2022- ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், லக்னோவில் உள்ள கவுல் பங்களாவில் பிரியங்கா காந்தி குடியேறுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
பிரியங்காவின் சகோதரர் ராகுல் காந்தி எம்.பி என்ற வகையில் 12 துக்ளக் லேன் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி 10 ஜன்பத் இல்லம் வழங்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமரின் மனைவி என்ற வகையில், வாழ்நாளுக்கும் சோனியா காந்தி இந்த பங்களாவில் வசிக்க அனுமதியுள்ளது
Comments