கொரோனா உயிரிழப்பு சடலத்தை இழுத்து சென்று வீசிய அவலம்..! பி.பி.இ கிட்டை கழற்றி வீசி ஓட்டம்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலத்தை இழுத்துச்சென்று வீசுவதை வழக்கமாக செய்து வருவதாக கர்நாடக சுகாதார பணியாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பெல்லாரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 9 பேரின் சடலங்களை ஒரே சவக்குழிக்குள் அவமரியாதையாக வீசிச்செல்லும் காட்சி வெளியாகி சர்ச்சையானது.
இதே போல கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலத்தை மிக அவமரியாதையாக எடுத்துச் செல்லும் நிகழ்வுகள் அங்கு தொடர்ந்து அரங்கேறி வருவதற்கு சாட்சியாக யாத்கிர் (Yadgir) மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை அமரர் ஊர்தியில் இருந்து மிகுந்த அச்சத்துடன் இறக்கி வைக்கும் சுகாதார பணியாளர்கள், மேற்கொண்டு தூக்கிச்செல்ல விரும்பாமல் அப்படியே சாலையோரம் தயங்கி நின்றபடியே கம்பி ஏதாவது கிடைக்குமா என்று தேடுகின்றனர்.
இடையிடையே முகத்தை துடைத்துக் கொண்ட இருவரும், ஏதோ இறந்து போன விலங்கை இழுத்துச்செல்வது போல சடலத்தை கம்பால் இழுத்துச் சென்று ஏற்கனவே வெட்டப்பட்ட குழிக்குள் அவமரியாதையாக வீசுகின்றனர்.
குழிக்குள் வீசப்பட்ட உடலைப் பற்றிக் கவலைபடாமல், தாங்கள் அணிந்திருந்த பிபிஇ கிட், கையுறை, முகக் கவசம் போன்றவைகளையும் அப்படியே கழற்றி சவக்குழிக்குள் வீசிவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
சடலத்திற்கு அவமரியாதை செய்தது மட்டுமின்றி, கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்பட்ட இறந்த உடலில் இருந்து கொரோனா தொற்று ஏற்படாது என்பதை கூட அறியாமல் நடந்துகொண்ட கர்நாடக சுகாதாரத்துறை ஊழியர்களின் செயல்பாடு கண்டனத்திற்குள்ளாகி உள்ளது.
கொரோனா உயிரிழப்பு சடலத்தை இழுத்து சென்று வீசிய அவலம்..! பி.பி.இ கிட்டை கழற்றி வீசி ஓட்டம் #CoronaVirus https://t.co/iIpxFmOwyX
— Polimer News (@polimernews) July 2, 2020
Comments