வியாபாரிகள் கொலை வழக்கு 4 பேர் கைது - விசாரணை தீவிரம்..!
சாத்தான்குளம் தந்தை,மகன் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக திருத்தம் செய்துள்ள சிபிசிஐடி போலீசார், 2 காவல் உதவி ஆய்வாளர்கள், 2 காவலர்களை கைதுசெய்துள்ளனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கடந்த 19 ந்தேதி காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிமன்றக் காவலுக்கு அனுப்பபட்ட நிலையில் மகன் பென்னிக்ஸும், தந்தை ஜெயராஜும் அடுத்தடுத்து மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனைக் கண்டித்து சாத்தான்குளம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேரடி விசாரணையில் இறங்கினார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டதையும் அங்கு ரத்தக்கறை படிந்திருப்பதையும் தனது விசாரணை அறிக்கையில், உறுதிப்படுத்தியதோடு, இந்த சம்பவத்தை காவலர் ரேவதி என்பவர் நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்திருப்பதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு பாரதிதாசன் அறிக்கை அளித்தார்.
மேலும் வழக்கு விசாரணை நடத்த தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தடயங்கள் காணாமல் போகும் ஆபத்து உள்ளதாக கூறி, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டதோடு, கொலை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க முகாந்திரம் இருப்பதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐஜி சங்கரின் நேரடிக் கண்காணிப்பில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சாத்தான்குளம் காவல் நிலைய தடயங்களை சேகரித்த தனிப்படையினர், ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினர் தொடங்கி கோவில்பட்டி கிளைச்சிறை வரை பல்வேறு இடங்களில் விசாரித்தனர். சாத்தான்குளம் பஜாரில் உள்ள சிசிடிவி காட்சிகள் என அனைத்து தடயங்களையும் சேகரித்தனர்
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியதால் தந்தை மகன் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகாருக்கு போதிய ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து, மர்ம மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 4 பேர் மீது மட்டும் முதற்கட்டமாக கூட்டுச் சதி மற்றும் கொலை ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதல் குற்றவாளியான ரகுகணேஷ் கைது செய்யப்பட்டதாக ஐ.ஜி சங்கர் தெரிவித்தார்.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ரகுகணேஷை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து, பேரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் 2 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய இருவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து 3 பேரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார்
இந்த வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நீதித்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக பென்னிக்ஸ் சகோதரி தெரிவித்தார்.
சிபிசிஐடி காவல்துறையினரின் முதற்கட்ட கைது நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து சாத்தான்குளத்தில் பட்டாசு வெடித்தனர்.
Comments