''குண்டூர் லாக்கப் கொடுமைதான் அந்த புத்தகத்தை எழுத வைத்தது!'' 'விசாரணை' ஆட்டோசந்திரன்
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் கஸ்டடியில் இறந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்தவர் சந்திரகுமார் என்ற ஆட்டோசந்திரன். மிகச்சிறந்த எழுத்தாளர். பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். 2006- ம் ஆண்டு இவர் எழுதிய 'லாக்கப்' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்துதான் வெற்றிமாறன் இயக்கத்தில் 'விசாரணை' தமிழ்படம் வெளியானது. ஆஸ்கர் விருதில் சிறந்த வெளிநாட்டுக்காக திரைப்படங்கள் வரிசையிலும் விசாரணை படம் திரையிடப்பட்டது.
சாத்தான்குளம் சம்பவத்தையடுத்து, தனக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து ஆட்டோசந்திரன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், '' 1983ம் ஆண்டு வாக்கில் கொள்ளை கும்பலைச் சேர்ந்தவன் என்று என்னை கருதி குண்டூர் போலீஸார் கைது செய்தனர். நான் அங்கு ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தேன். 10×10 அறையில் நாங்கள் 25 பேர் பாதி நிர்வாணமாக அடைபட்டு கிடந்தோம். 13 நாள்கள் தாங்க முடியாத அளவுக்கு அடித்து துன்புறுத்தினர். அடி தாங்காமல் நான் சாப்பிட மறுத்தேன். பிறகு , இரு நாள்கள் என்னை அடிக்காமல் விட்டனர். குற்றத்தை ஒப்புப் கொண்டால் விட்டு விடுவதாக சொன்னார்கள். ஆனால், நான் ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர், ஐந்தரை மாதங்கள் சிறையில் அடைத்தனர். சாத்தான்குளம் சம்பவத்தை கேள்விபட்ட போது குண்டூர் போலீஸால் நான் அனுபவித்த கொடுமைகள்தான் நினைவுக்கு வந்தது.
பொதுமக்கள் கோபத்தால் மட்டும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நினைத்தால் அது தவறு. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாட்சியங்கள், நேரில் பார்த்தவர்கள் முக்கியமானவர்கள். ஒரு நபர் குற்றவாளி என்று உலகம் முழுக்க சொன்னாலும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட வேண்டும். சாத்தான்குளம் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்று இந்தியாவே வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும், நீதிமன்றமன்றத்தில் நேரில் பார்த்தவர்கள் மட்டுமே சாட்சியமளிக்க முடியும், பொது மக்கள் அல்ல. அதிகாரிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய சாட்சிகள் வலுவாக இருக்க வேண்டும். இந்த வழக்கு மற்ற வழக்குகளைப் போல அல்ல, தற்காப்புக்காக கொன்றதாக கூட காவல்துறை கூறலாம். ஏனென்றால், இந்த சம்பவம் காவல் நிலையத்துக்குள் நடந்துள்ளது.
காவலில் சித்திரவதை செய்யப்பட்டவர்கள் அனேகர் . வெளியே தெரியாத பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பொதுவாக, குற்ற பின்னணி கொண்டவர்களை சித்திரவதை செய்து காவல்துறை அவர்களுக்கு எதிராக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஒப்புதல் பெற வைத்து விடுகின்றனர். ஆனால் சாத்தான்குளம் வழக்கில், இறந்தவர்களுக்கு குற்ற பின்னணி இல்லை. மொபைல் கடை நடத்தும் சாதாரண மக்கள் அவர்கள். இதனால், குற்றம் இழைத்தவர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்புள்ளது '' என்கிறார்
Comments