ஒரு புறம் பேச்சு மறுபுறம் படைகள் குவிப்பு சீனாவால் மீண்டும் பதற்றம்

0 5601

ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடக்கும் நிலையில்,கட்டுப்பாட்டு எல்லையில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான படையினரை சீனா குவித்துள்ளதால் கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

கால்வானில் கடந்த 15 ஆம் தேதி சீனா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, எல்லைப் பதற்றத்தை தணிக்க கடந்த 22 ஆம் தேதி 2 ஆம் கட்டமாகவும் நேற்று 3 ஆம் கட்டமாகவும் இந்திய-சீன ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், கால்வானில் இருந்து தனது துருப்புக்களை திரும்ப அழைத்துக் கொள்வதாக சீனா உறுதி அளித்து, அதன்படி சில துருப்புக்கள் பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  கட்டுப்பாட்டு எல்லை ஊடாக, சீனா 20 ஆயிரத்திற்கும் அதிகமான போர்வீரர்களை குவித்துள்ளது.

அத்துடன், எல்லைப்பகுதிக்கு 48 மணி நேரத்தில் வரக்கூடிய அளவில்,ஜின்ஜியாங்கில் மேலும் 12 ஆயிரம் துருப்புக்களை சீனா நிறுத்தி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்திய எல்லைக்கு அருகில் நடக்கும் சீனாவின் இந்த படைப் பெருக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக டெல்லியில் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆறு வார காலமாக இருதரப்பிற்கும் இடையே ராஜீய-ராணுவ பேச்சுவார்த்தை நடந்தாலும், எல்லையில் படைகளையோ, போர் தளவாடங்களையோ குறைக்க சீனா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சீனா படைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இந்தியாவும் ரிசர்வ் மவுன்டன் டிவிசன் உள்பட இரண்டு படைப் பிரிவுகளை எல்லைப் பகுதிக்கு அனுப்பி உள்ளது.

டிபிஓ பிரிவில் இப்போது இருக்கும் தளவாடங்களுடன், டாங்குகளும் BMP -2 இன்பான்டரி போர் வாகனங்களும், விமானப்படை விமானங்கள் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கால்வானில் இருந்து காரகோரம் கணவாய் செல்லும் வழியிலும் சீனா துருப்புக்களை நிறுத்தி உள்ளதால், இந்தியாவும் அங்கு படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

லடாக் கட்டுப்பாட்டு எல்லையில் சீனா படைகளை குவித்துள்ளதை அடுத்து, அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ராணுவ தளபதி எம்எம்.நரவானேயும் வெள்ளி அன்று லடாக் தலநகரமான லே-க்கு செல்ல உள்ளனர்.

எல்லையில் பதற்றத்தை குறைக்க இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடக்கும் போது, சீனா படைகளை குவிப்பது பிரச்சனையை சிக்கலாக்கும் என கருதப்படும் நிலையில், இவர்களின் லடாக் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments