98 நாட்களுக்குப் பின் கோவில்கள் திறப்பு சமூக விலகலைக் கடைப்பிடித்து வழிபாடு

0 3694

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள் 98 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்துப் பொதுமக்கள் சமூக விலகலையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைப்பிடித்து வழிபாடு நடத்தினர்.

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மார்ச் 25ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன.

ஊரடங்கில் இரண்டாம் கட்டத் தளர்வாக ஊரகப் பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டுத் தலங்களைத் திறந்து வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் 98 நாட்களுக்குப் பின் மீண்டும் கோவில்கள் திறக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சிவகிரிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில், புளியம்பட்டி அமிர்த லிங்கேஸ்வரர் கோவில் ஆகியன திறக்கப்பட்டன. பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து வழிபட்டனர்.

ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் யாகங்களுக்குப் பின் சிறப்பு அபிசேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிந்து சமூக விலகலைக் கடைப்பிடித்துப் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைஅடுத்த நன்செய் இடையாறு அக்னி மகாமாரியம்மன் கோவில், பொய்யேரி காளியம்மன் கோவில் ஆகியன திறக்கப்பட்டன. ஆகம விதிப்படி சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு அலங்காரத் தீபாராதனை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் சமூக விலகலைப் பின்பற்றி வழிபாடு நடத்தினர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வழித்துணை விநாயகர் ஆலயத்தில் 98 நாட்களுக்குப் பிறகு பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்தினர். இதேபோல் வந்தவாசி திண்டிவனம் சாலையில் உள்ள ஜெய் சக்தி அம்மன் ஆலயம் திறக்கப்பட்டதால் பக்தர்கள் முகக் கவசத்துடன் வந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments