அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து

0 1464

நெய்வேலி இரண்டாவது அனல்மின் நிலையத்தின் ஐந்தாவது அலகில் பாய்லர் வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். கடுமையாகக் காயமடைந்த 17 பேருக்கு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் ஆயிரத்து 470 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதன் ஐந்தாவது அலகில் புதன் காலையில் பாய்லர் வெடித்துப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அங்குப் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களில் 6 பேர் நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 17 பேர் கடுமையாகக் காயமடைந்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இவர்களை உடனடியாக மீட்டு நெய்வேலி என்எல்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்து வந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் என்எல்சி நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரும், தமிழகக் காவல்துறையினரும் நுழைவாயில்முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே நெய்வேலி 2வது அணல் மின் நிலைய முதன்மை பொது மேலாளர் கோதண்டத்தை பணியிடை நீக்கம் செய்து என்.எல்.சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது விபத்துக்கு காரணம் எனக் கூறி 304/ஏ பிரிவின் கீழ் தெர்மல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பாய்லர் வெடித்த விபத்து நிகழ்ந்த இடத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments