சீன செயலிகளுக்கு தடை.. இறுகுகிறது கடிவாளம்..!
சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனே அமல்படுத்துமாறு இணைய தள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, சீனாவின் மேலும் பல செயலிகளையும், இணைய தளங்களையும் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக்டாக், ஷேர்இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த திங்களன்று தடை விதித்தது. இந்த தடையை உடனே அமல்படுத்துமாறு இண்டர்நெட் சேவை நிறுவனங்களுக்கும், மொபைல் நிறுவனங்களுக்கும் தொலைத் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த 59 செயலிகளையும் முடக்குவதற்கான வழிமுறைகளை மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐ.டி,துறை வெளியிட்டுள்ளதாவும், அவற்றை பின்பற்றி நடவடிக்கை எடுக்குமாறும் தொலைத் தொடர்பு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த செயலிகள் முடக்கப்பட்டது குறித்த அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொலைத் தொடர்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. அதே போன்று முடக்க வேண்டிய இதர செயலிகள், ஆபாச தளங்கள் மற்றும் சீனாவின் பல இணைய தளங்களின் பட்டியலையும் தொலைத் தொடர்பு அமைச்சகம் தயாரித்து வருகிறது.
இந்தியா விதித்துள்ள தடை, சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா, லெனோவா, ஜியோமி (Alibaba, Xiaomi, Lenovo,) உள்ளிட்டவற்றுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், இந்தியாவின் பிரம்மாண்டமான டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பையும் சீன நிறுவனங்கள் இழக்க உள்ளன.
கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின் படி இந்தியாவின் டாப் 200 மொபைல் செயலிகளில் 38 சதவிகிதம் சீனாவை சேர்ந்தவையாகும். இந்திய அரசு விதித்துள்ள தடை பொருளாதார ரீதியாக, சீன நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தடை செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள், 59 சீன மொபைல் செயலிகளின் பிரதிநிதிகள் மத்திய அரசு அமைத்துள்ள குழுவின் முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட செயலிகளின் பிரதிநிதிகள் குழுவினரை சந்தித்து, இந்திய வாடிக்கையாளர்கள் குறித்த தரவுகள் சீன சர்வர்களுக்கு அனுப்பப்படுவதில்லை என நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments