'ரேவதீ' - டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சாத்தான்குளம் சாட்சி
சாத்தான்குளம் போலீஸ் கஸ்டடியில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்தது நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலும் இந்த சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் தானாகவே இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனுக்கு காவல்நிலையத்தில் இருந்தவர்கள் சரி வர ஓத்துழைப்பு வழங்கவில்லை.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் பணியிலிருந்த தலைமைக் காவலர் ரேவதி கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனிடம் சாட்சியம் அளித்தார். அந்த சாட்சியத்தில், “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய இரவு முழுவதும் லத்தியால் அடித்து துன்புறுத்தினர். காவல் நிலைய டேபிள் மற்றும் லத்தியில் ரத்தக்கரைகள் இருந்ததைப் பார்த்தேன்” என்று கூறினார். இந்த சாட்சி தான் வழக்கில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில், உண்மையைக் கூறினால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று முதலில் அஞ்சிய ரேவதி பிறகு தைரியமாக நீதிபதியிடம் நடந்த சம்பவங்களைத் தெரிவித்தார். அரசு அமைப்பு முழுவதும் படுகொலையில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகளைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கையில், தைரியமாக சாட்சி கூறிய ரேவதி தற்போது சமூக வலைத்தளத்தில் டிரண்டாகியுள்ளார அவருக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவருவதால், ட்விட்டரில் இன்று ரேவதி தான் நம்பர் 1 டிரெண்டிங்!
'இருட்டில் ஒரு ஒளி நட்சத்திரம், ரேவதீ' என்று சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், "தூத்துக்குடி காவல் நிலைய படுகொலை வழக்கில் தலைமைக் காவலர் ரேவதி காட்டிய தைரியம் பெருமைப்பட வைக்கிறது. நாங்கள் உங்களுக்கு துணை இருக்கிறோம் மேம்" என்று என்று பதிவிட்டுள்ளார் .
அவினாஷ் எனும் இளைஞர், "தலைமைக் காவலர் ரேவதி கொண்டாடப்பட வேண்டிய பெண். அவரது பாதுகாப்பை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார். மக்கள் நீதிய மய்யத் தலைவருமான கமலகாசன், ஜூவி பிரகாஷ் ஆகியோரும் ரேவதிக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டூள்ளனர்.
Immensely proud of the courage shown by police constable #Revathi , who has stood up for what is right in the Thoothukudi Custodial Deaths case. We are with you all the way! #JusticeForJayarajandFenix #ProudOfRevathi
— aishwarya rajessh (@aishu_dil) July 1, 2020
பாகுபலியின் தேவசேனா, உண்மையை எடுத்துச்சொன்ன ரேவதிக்குத் தலை வணங்குவோம் என்று தலைமைக் காவலர் ரேவதிக்கு ஆதரவாக #Revathi #JusticeForJayarajandFenix #ProudOfRevathi என்று பல தரப்பிலும் சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
சாத்தான்குளம் ரேவதியின் படம் என்று ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட ரேவதி என்பவரின் படத்தைத் தவறாகப் பகிர்ந்துவருகிறார்கள் நெட்டிசன்கள்!
Comments