அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து..!
நெய்வேலி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கடுமையாகக் காயமடைந்த 18 பேருக்கு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்துப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்குப் பணிபுரிந்த ஊழியர்களில் இருபதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி 5 பேர் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்ற 2வது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் சுமார் 30 பேர் வரை பணியில் இருந்தாக கூறப்படுகிறது.
அவர்களின் ஐந்து பேர் மாயமாகியுள்ள நிலையில் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் என்எல்சி நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பாய்லர் வெடித்த விபத்தில் கடுமையாகக் காயமடைந்த 18 பேருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதேபோல் ஜூன் மாதம் 7ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில் மீண்டும் அதே போன்றதொரு விபத்து ஏற்பட்டுள்ளது தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Comments