சாத்தான்குளம் வழக்கு: சிபிசிஐடி விசாரணை தீவிரம்..!
சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற தந்தை - மகன் சிறையில் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை சூடிபிடித்துள்ளது. மூன்று குழுவாக பிரிந்து சம்பந்தப்பட்ட இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை, விசாரணை என தீவிரம் காட்டி வருகின்றனர்.
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, வழக்கு தொடர்பான ஆவணங்களும் சிபிசிஐடி டி.எஸ்.பி.அனில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், அரசு பாதுகாப்பில் இருந்தவர் சந்தேகிக்கப்படும் வகையில் மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சிபிசிஐடி அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு குழு ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் நடத்தி வந்த செல்போன் கடைக்கு அருகே விசாரணை நடத்தினர். 19ந் தேதி அங்கு நடைபெற்ற சம்பவங்களையும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். இருவரையும் கடையில் இருந்து காவல் நிலையம் அழைத்து சென்ற நேரம், எந்தெந்த காவலர்கள் ஜெயராஜ்- பென்னிக்ஸை அழைத்து சென்றனர் என்பது குறித்து அருகேயுள்ள கடைகளில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. அனில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரித்தனர்.
மற்றொரு குழு ஜெயராஜ்-பென்னிக்ஸ் வீட்டிலும், அவர்களது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியது. மேலும், சாத்தான்குளம் காவல் நிலையத்திலும் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னதாக காவல் நிலையத்தில் தடயவியல் நிபுணர்களும், தொழில்நுட்ப பிரிவு காவலர்களும் ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது. சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் அந்த பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
தந்தை - மகன் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து காவலர்களுக்கும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி விசாரணை அதிகாரி டிஎஸ்பி அனில்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஜெயராஜின் மனைவி, மகள் என தனித்தனியே சிபிசிஐடி விசாரணை அதிகாரி விசாரணை நடத்தினார். ஏற்கனவே, சிபிசிஐடி அதிகாரிகள் குழுவும் ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Comments