'மராத்தி அலுவலக மொழி, மீறுபவர்களுக்கு சம்பள உயர்வு ரத்து' - மகாராஸ்டிர அரசு அதிரடி
மகாராஸ்டிர மாநிலத்தில் ஏற்கெனவே, மராத்தி அலுவலக மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை பின்பற்றாதவர்களுக்கு சம்பள உயர்வு ரத்து செய்யப்படுமென்று மகாராஸ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாஸ்டிர மாநில மராத்தித்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,''பெரும்பாலான அரசு துறைகளில் இன்னும் ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர். இணையதளங்களும் ஆங்கிலத்திலேயே உள்ளன. முனிசிபல் அலுவலகங்கள் விநியோகிக்கும் நோட்டீஸ்கள், கடிதங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன. இது குறித்த புகார்கள் வந்துள்ளன. ஏற்கெனவே, மராத்தி மொழியில்தான் அலுவலக நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்று உத்தரவிட்டும் பின்பற்றப்படவில்லை. இனிமேல், அலுவலக நடைமுறைகள் ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு துறைத் தலைவர்களும்தான் இதற்கு பொறுப்பு. ஊழியர்கள் மராத்தி மொழியில் அலுவலக நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்வது துறைத் தலைவர்களின் கடமை. விதிகளை பின்பற்றாதவர்களுக்கு சம்பள உயர்வு ரத்து செய்யப்படும் '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகராஸ்டிர சட்டமன்றத்தில், பள்ளிகளில் மராத்தி மொழியை கட்டாயப்பாடமாக்கி கடந்த பிப்ரவரி மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மராத்தி மொழித்துறை அமைச்சர் சுபாஷ் தேஷாய், கல்வித்துறை அமைச்சர் வர்ஷான் கெயிக்வாட் ஆகியோர் 2020-21 ம் ஆண்டு முதல் பள்ளிகளில் மராத்தி கட்டாய பாடம் எனவும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 6 - ம் வகுப்பு வரை கட்டாயம் மராத்தி கற்றுத்தரப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
Comments