ஊரடங்கு மீறியவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வது ஏன்? மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி
ஊரடங்கை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வது ஏன் என நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று, தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் கடைக்குச் சென்றுள்ளார். அப்பகுதியில் இருந்த, அண்ணாநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன், அவருக்கு அனுமதி மறுத்த போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சதாம் உசேனை போலீசார் அடித்து தரதரவென இழுத்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக, மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வது ஏன் எனவும், 4 வாரங்களில் விளக்கம் அளிக்க, சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Comments