கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கம்
மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும், பொது ஒழுங்கிற்கும் ஆபத்து என்ற அடிப்படையில், டிக்-டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடையைத் தொடர்ந்து, இந்தியாவில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் அந்தரங்கம் பேணும் உரிமையை மீறியதாகவும், இந்தியாவிற்கு வெளியே பயனாளர்களின் தரவுகளை சேமித்ததாகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஆப் மற்றும் பிளே ஸ்டோர்களில் இருந்து டிக்-டாக் செயலியை இனி பதிவிறக்க முடியாது. ஏற்கெனவே டிக்-டாக் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் மொபைல் போன்களில், அந்த செயலி நன்றாக இயங்கி வருகிறது. ஏதேனும் காரணத்திற்காக அந்த செயலியை நீக்கி விட்டால் மீண்டும் பதிவிறக்க முடியாது.
இதனிடையே, தங்களது செயலி உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்திய அரசு இடைக்கால தடை விதித்திருப்பதாகவும், அதற்கு இசைவாக நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் டிக்-டாக் தெரிவித்துள்ளது.
இந்த இடைக்கால தடை தொடர்பாக, மத்திய அரசிடம் தங்களது சார்பில் விளக்கங்களை அளிக்க உள்ளதாகவும் டிக்-டாக் கூறியுள்ளது. இந்திய சட்டங்களுக்கு இணங்க, பயனாளர்கள் விவரங்களை பாதுகாப்பதாகவும், சீனா உள்ளிட்ட எந்த வெளிநாட்டு அரசுக்கும் இந்தியப் பயனாளர்களின் விவரங்களை வழங்குவதில்லை, எதிர்காலத்திலும் இந்த நடைமுறையே தொடரும் என்று டிக்-டாக் நிறுவனம் கூறியுள்ளது.
14 இந்திய மொழிகளில் கன்டன்டுகளை வழங்குவதன் மூலம் இணையத்தை ஜனநாயகப்படுத்தியிருப்பதாக, இந்தியாவில் டிக்-டாக் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள நிகில் காந்தி தெரிவித்துள்ளார்.
Comments