ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் போலீசார் அடித்தனர் - தலைமை காவலர் ரேவதி பரபரப்பு வாக்குமூலம்

0 10291
கோவில்பட்டி நீதிபதியிடம் சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதி பரபரப்பு வாக்குமூலம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை போலீசார் விடிய விடிய லத்தியால் அடித்ததற்கான சாட்சியம் கிடைத்துள்ளதாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதே போல் காவல் நிலையத்தின் டேபில் மற்றும் லத்தியில் ரத்தக்கறை இருந்தததை சாட்சியம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், கடந்த 28ம் தேதி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டார். அது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்தார்.

அதில் விசாரணைக்கு சென்ற போது காவல் நிலையத்தில் போலீசார் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ள நீதிபதி, உடல் பலத்தை காட்டும் வகையிலும், மிரட்டும் தொனியிலான பார்வை மற்றும் உடல் அசைவுகளுடனும் ஏஎஸ்பி குமார் அமர்ந்திருந்தார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் வழக்கு கோப்புகளை மிகவும் தாமதமாகவே காவல் நிலைய தலைமை எழுத்தர் ஒப்படைத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சாத்தான்குளம் காவல் நிலைய டேபில் மற்றும் லத்தியில் ரத்தக்கறை படிந்துள்ளதாக அங்கு பணியிலிருந்த காவலர் ரேவதி தம்மிடம் சாட்சியம் கூறினார் என குறிப்பிட்டுள்ள நீதிபதி, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் காவலர் ரேவதி சாட்சியம் அளித்ததாக கூறியுள்ளார். ஆனால் கடைசியில் சாட்சிப் பதிவில் கையெழுத்திட காவலர் ரேவதி மறுத்துவிட்டார் எனவும், மிகவும் சிரமப்பட்டே அவரிடம் கையெழுத்தை பெற முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி நடந்த சம்பவத்தை தலைமை காவலர் ரேவதி, மிகுந்த பயத்துடனேயே சாட்சியம் அளித்தார் என்றும், சாட்சியம் அளித்தால் தனக்கு மிரட்டல் வரும் என்று மிகுந்த பயத்துடன் காணப்பட்டார் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் சாட்சி கூறியபடி லத்திகளை கைப்பற்றும் பொருட்டு அவற்றை கொடுக்கும்படி கூறியும் அங்கிருந்த காவலர்கள் காதில் ஏதும் விழாதது போல் இருந்தார்கள் என்றும், பிறகு கட்டாயப்படுத்தியதன் பேரிலேயே அனைவரும் லத்திகளை ஒப்படைத்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அதில் மகாராஜன் என்ற காவலர் தன்னை பார்த்து ’ உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா என தனது முதுகுக்கு பின்னால் காதில் விழும்படி பேசி அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார் என்றும் நீதிபதி தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதனால் லத்தியை தர மறுத்த காவலர் மகாராஜனை கையை வைத்து தள்ளி அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், லத்தியை கேட்ட போது மேலும் ஒரு காவலர் எகிறி குதித்து தப்பி ஓடிவிட்டார் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் தானாகவே தினமும் அழிந்து போகும் வகையில் செட்டிங்ஸ் செய்யப்பட்டிருந்தது எனவும் நீதிபதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஹார்ட் டிஸ்கில் 1TB ((டெரா பைட்)) அளவுக்கு போதுமான ஸ்டோரேஜ் இருந்தும் நாள்தோறும் காட்சிகள் தானாகவே அழிந்து போகும் வகையில் செட்டிங்ஸ் செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ள நீதிபதி, காவல் நிலையத்தில் 19ந் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகளும் அழிக்கப்பட்டிருந்தன என்றும் கூறியுள்ளார்.

சிசிடிவி காட்சிகளை தரவிறக்கம் செய்யும் பொருட்டு ஸ்டோரேஜ் ஹார்ட் டிஸ்க்கை பறிமுதல் செய்து தனது பாதுகாப்பில் வைத்திருப்பதாகவும் நீதிபதி பாரதிதாரசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோவில்பட்டி நடுவர்மன்ற நீதிபதி பாரதிதாசன், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மீண்டும் ஆய்வு நடத்தினார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீதிபதி பாரதிதாசன் 16 மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments