கட்டணம் வசூலிக்க அரசு விதித்த தடையை எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு...
தவணை முறையில் கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக திட்டம் வகுக்கக் கோரி தனியார் பள்ளி சங்கங்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில், பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டணம் செலுத்தும் படி பெற்றோரை தனியார் பள்ளிகள் நிர்ப்பந்திக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 248 கோடியே 76 லட்சம் ரூபாய் தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகையைப் பயன்படுத்தி மூன்று, நான்கு மாதங்களுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் தரலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தவணைமுறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு மனு அளிக்கலாம் என அறிவுறுத்தி வழக்கு ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Comments