ஜெயராஜ் - பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள் - இன்றே விசாரணையை தொடங்க உத்தரவு
ஜெயராஜ்-பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ள முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் அறிக்கையின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இதே போன்று சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இன்றே விசாரணையை தொடங்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தந்தை-மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்ததாக எழுந்த புகார் குறித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து விசாரித்து பல்வேறு உத்தரவுகளை வழங்கி வருகிறது.
நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ பலவித அனுமதிகளைப் பெற்று விசாரணை தொடங்குவதற்குள், சம்பவம் தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அனைத்து காவல்துறையினரும் மோசமானவர்கள் அல்ல என்றாலும், ஒரு சிலரின் நடவடிக்கைகளால் இது போன்ற பிம்பம் ஏற்பட்டுவிடுகிறது என குறிப்பிட்ட நீதிபதிகள், ஜெயராஜ்-பென்னிக்ஸ் முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
அதனடிப்படையில் பார்க்கும்போது, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருந்ததும், ஐபிசி 302ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யவும் முகாந்திரம் உள்ளது என்றும் நீதிபதிகள் கூறினர்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சாட்சி அளிக்கையில் காவலர் ரேவதி மிகவும் அச்சமடைந்து காணப்பட்டதாக நீதித்துறை நடுவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த காவலருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது என்றனர்.
சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டு வழக்கு மீண்டும் பிற்பகலில் விசாரணைக்கு வந்தபோது, சாத்தான்குளம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் விசாரணை நடத்தலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
கோவில்பட்டி மாஜிஸ்திரேட் அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனையின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக கூறிய நீதிபதிகள், டிஜிபியின் வழக்கமான உத்தரவுக்கு காத்திருக்காமல் சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் விசாரணையை தொடங்க அனுமதி அளித்தனர்.
சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் விசாரணை திருப்தி அளித்தால் சிபிஐக்கு வழக்கை மாற்றியதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
வழக்கு நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு, சிபிசிஐடி டி.எஸ்.பி அணில்குமாரிடம் ஒப்படைத்தார். நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் வைத்து டிஐஜி பிரவீன்குமார் அபினபு நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி அணில்குமாரிடம் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்தார். இதனையடுத்து ஆவணங்களை பெற்றுக் கொண்டுவிட்டதாகவும் , விரைவில் விசாரணையை தொடங்குவோம் எனவும் சிபிசிஐடி டி.எஸ்.பி அணில்குமார் தெரிவித்துள்ளார்.
Comments