உய்குர் முஸ்லிம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை! சத்தமில்லாமல் இனபடுகொலையில் ஈடுபடும் சீன அரசு
சீனாவில் வசிக்கும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிறுபான்மை மக்களான உய்குர் இன மக்களின் பிறப்பு விகிதத்தைக் குறைத்து, அவர்களின் மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் உய்குர் இன பெண்களுக்கு கட்டாய கருத்தடையை சீன அரசு மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. AP செய்தி நிறுவனம் மேற்கொண்ட புலனாய்வில் இந்தத் தகவல் அம்பலமாகியிருக்கிறது.
சீன அரசின் புள்ளி விவரங்கள், மாநில ஆவணங்கள், 30 - க்கும் மேற்பட்ட முன்னாள் கைதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவில் உய்குர் இன பெண்களுக்குக் கட்டாயமாகக் கருத்தடை மேற்கொள்ளப்படுவது தெரிய வந்துள்ளது. சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தின் மேற்குப் பகுதிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கட்டாய கருத்தடைகளை மேற்கொள்ளும் சீன அரசின் இந்த நடவடிக்கையை இனப்படுகொலை' என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
சிறுபான்மையின மக்கள் கருத்தரித்திருக்கிறார்களா என்பதை சீன அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீன நாட்டில் பரவலாகக் கருக்கலைப்பு குறைந்து வந்தாலும் ஜின்ஜியாங் மாகாணத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை நேர் மாறாகத் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் இனத்தில் குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். குழந்தை பெற்றுக்கொண்டால் கட்டாயமாக அபராதம் விதிக்கப்படுகிறது. பிறக்கும் குழந்தைகள் தனி விடுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று காவலர்களும் ராணுவ அதிகாரிகளும் மறைந்திருக்கும் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள் என்றும் ஏ.பி நிறுவனம் நடத்திய புலனாய்வில் தெரிய வந்துள்ளது.
ஜின்ஜியாங் மாகாணத்தில் குல்னார் ஓமிர்சாத் என்ற பெண் மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளார். பின்னர், அரசு கட்டாயமாக அவருக்கு IUD கருத்தடை சாதனத்தை பொருத்தியுள்ளது இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2018 - ம் ஆண்டில் நான்கு ராணுவ அதிகாரிகள் வந்து குல்னார் வீட்டைத் தட்டி மூன்று நாள்களுக்குள் 2685 அமெரிக்க டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்தப் பணத்தைச் செலுத்த முடியாததால் அந்த பெண்ணின் கணவர் வதை முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.
"கடவுள் தான் நமக்குக் குழந்தைகளைக் கொடுக்கிறார். அதைத் தடுப்பது தவறு. சீனர்கள் எங்களையும் எங்கள் மக்கள் முழுவதையும் அழிக்கப் பார்க்கிறார்கள்" என்று கண்ணீரோடு கூறுகிறார் குல்னார்.
சீன அரசின் கடுமையான நடவடிக்கைகள் மூலம் உய்குர் இன மக்களின் குழந்தை பிறப்பு விகிதம் 2015 - 2018 ம் ஆண்டில் மட்டும் 60 % குறைந்துள்ளதுசீனாவின் உய்குர் இன மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் கூட அமெரிக்க அதிபர் டிரம்ப் உய்குர் மக்கள் விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான மசோதாவுக்குக் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது...
Comments