சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீதிபதிக்கு அவமதிப்பு : உயர்நீதிமன்றம் அதிர்ச்சி

0 2485

விசாரணை நடத்த சென்றபோது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நேர்ந்தது குறித்து, நீதித்துறை நடுவர் பாரதிதாசன் அளித்த அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணை நடத்தச் சென்ற, குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசனுக்கு, போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதற்காக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிராதபன் ஆகியோரை இன்று நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் நீதித்துறை நடுவரை ஒருமையில், மரியாதைக் குறைவாக, ஏளனமாக, சவால்விடும் வகையில் பேசியதாக காவலர் மகராஜனையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.

மூவர் மீதும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து பதிவு செய்த இந்த குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீசார் மூவரும் நேரில் ஆஜராகினர். நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, நெல்லை சரக ஐஜி பிரவீன் குமார் மற்றும் தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் ஆகியோர் அரசு வழக்கறிஞருடன் இருந்தனர்.

நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காத ஏடிஎஸ்பி குமார் மற்றும் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதித்துறை நடுவரை மரியாதைக்குறைவாக பேசிய காவலர் மகராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த 24 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்தது.

விசாரணை நடத்த சென்றபோது காவல்நிலையத்தில் நேர்ந்தது குறித்த நீதித்துறை நடுவரின் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், சம்மந்தப்பட்ட போலீசார் மீதான, குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரும் என தெரிவித்தனர். இதற்காக அவர்கள் தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

நீதித்துறை நடுவர் புகாரில் கூறியதுபோல, அவர்கள் செய்தது தவறு என்றாலும், அதிக மன அழுத்தம் காரணமாகவே நிகழ்வு நடைபெற்றுள்ளது என அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

நீதித்துறை நடுவர் தான் விசாரிக்கிறார் என்பது போலீசாருக்கு தெரியுமா? தெரிந்தும் ஏன் இவ்வாறு பிரச்சனையை பெரிதுபடுத்தும் விதமாக நடந்து கொண்டனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, மூவர் தரப்பிலும் வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட்டு, பதிலளிக்க 4 வார கால அவகாசம் அளித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதனிடையே, ஜெயராஜ்-பென்னிக்ஸ் முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டின் அறிக்கை மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவு நகல் ஆகியவற்றை, நெல்லை சரக டிஜஜியிடம் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் ஒப்படைத்தார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி, இவற்றையும் வழக்கு ஆவணங்களையும் சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமாரிடம் ஒப்படைத்த உடன் அவர் இன்றே விசாரணையை தொடங்குவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments