சீன தற்காப்பு கலைக்கு பதிலடி கொடுக்க எல்லையில் 'கட்டக்' வீரர்கள்!
கல்வான் சண்டையில் இந்திய சீன வீரர்கள் கைகளாலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்திய சீன எல்லையில் துப்பாக்கிகளை பயன்படுத்த தடையிருப்பதால், இரு தரப்பு வீரர்களுக்கு கைகள் மற்றும் கம்புகள், இரும்புத்தடிகளால் சண்டையிட்டுக் கொள்கின்றனர். சில நேரங்களில் கல்வீச்சிலும் ஈடுபடுவது உண்டு. இந்த நிலையில், தங்கள் வீரர்களுக்குப் பயிற்சியளிக்க சீன தற்காப்புக் கலை பயிற்சியாளர்களை அந்த நாட்டு அரசு எல்லை பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது
சீன வீரர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்கப்படுவதால், இந்தியாவில் கைகளால் போரிடுவதில் திறமை பெற்ற கட்டக் பிரிவு காமாண்டோக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய இராணுவத்தின் ஒவ்வொரு காலாட்படை பட்டாலியனிலும் கட்டக் என்கிற சிறப்பு படைப்பிரிவினர் உள்ளனர். தரைப்படை வீரர்களுடன் ஒப்பிடும்போது, ஆயுதம் வைத்துக் கொண்டும் மற்றும் நிராயுதபாணியான போரிலும் சண்டையிடுவதில் இவர்கள் தன்னிகரற்றவர்கள்.
தரைப்படை வீரர்களில் நல்ல ஃபிட்னெஸ் கொண்டவர்கள் கட்டக் கமாண்டோக்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். கர்நாடகாவிலுள்ள பெலகாவியில் இந்திய இராணுவத்தின் கமாண்டோ பயிற்சி பள்ளியில் இவர்களுக்கு 43 நாள் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. உடல் பயிற்சியின் போது, 35 கிலோ ஆயுதங்கள் மற்றும் பொருட்களுடன் 40 கிலோ மீட்டர் ஓடி தினமும் பயிற்சி பெற வேண்டும். கையில் ஆயுதம் இல்லாமல் சண்டையிடும் பயிற்சியும் இவர்களுக்கு வழங்கப்படும். ஒரு யூனிட்டில் 40 அல்லது 45 கட்டக் வீரர்கள் இருப்பார்கள்.
இந்திய ராணுவத்தில் சத்தமில்லாமல் பணியாற்றுபவர்களில் கட்டக் வீரர்கள் முதன்மையானவர்கள். 2017 ம் ஆண்டு 4 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பூஞ்ச் பகுதியில் எல்லை கடந்து பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதலை நடத்தியது இவர்கள்தான். யூரி ராணுவத் தளத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானுக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. 6 பீகார் மற்றும் 10 டோக்ரா படை பிரிவைச் சேர்ந்த கட்டக் வீரர்கள்தான் பாராசூட் படைப் பிரிவுடன் இணைந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர். கல்வானில் சீனப்படைகளுடன் நடந்த கைக்கலப்பில் 20 இந்திய வீரர்கள் இறந்தனர். வீர மரணமடைந்தவர்களில் குர்தேஜ்சிங் என்பவரும் ஒருவர். இவர், 3 பஞ்சாப் படைப் பிரிவைச் சேர்ந்த கட்டக் வீரர் ஆவார். குர்தேஜ் சிங் கையால் அடித்தே சில சீன வீரர்களை கொன்றதாக தகவல் உண்டு...
Comments