சிக்கல் இல்லாத வாழ்க்கை.... சமூக வலைத்தளங்களைப் பாதுகாப்புடன் கையாள்வது எப்படி? #WorldSocialMediaday
தூக்கம் களைந்து கண் விழிப்பதிலிருந்து இரவு தூங்கும் வரை பெரும்பாலும் சமூக வலைத்தளங்களிலேயே பொழுதைக் கழிக்கிறோம். அந்த அளவுக்கு சமூக வலைத்தளங்கள் நம் வாழ்க்கையை ஆக்கிரமிப்பு செய்துவிட்டன. ஒவ்வொருவரும் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் என்று பலவிதமான சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவற்றில் பாதுகாப்புடன் தான் நாம் இயங்குகிறோமா என்றால் கேள்விக்குறிதான் மிஞ்சும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 - ம் தேதி உலக சமூக வலைத்தள நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது இந்த நாளில் சமூக வலைத்தளங்களில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம்...
1. நீங்கள் எந்த சோசியல் மீடியா செயலிகளைப் பயன்படுத்தினாலும் அவற்றின் பிரைவசி பாலிசி மற்றும் செட்டிங்க்ஸ் குறித்து நன்கு அறிந்துவைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பகிரும் பதிவுகள் மற்றும் படங்கள் அனைவருக்குமா அல்லது உங்கள் நண்பர்களுக்கு மட்டுமா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.
2. சமூக வலைத்தளங்களில் உங்களது நன்மதிப்பை எப்போதும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஒரு முறை பதிவு போடுவதற்கு முன்பு பல முறை சிந்தித்துக்கொள்ளுங்கள். நீங்கள் போடும் பதிவு உங்களது குடும்பத்தினர், உறவினர்கள், உடன் வேலை பார்ப்பர்வர்கள் இந்தப் பதிவுகளைப் பார்த்தால் பிரச்னை ஏற்படுமா என்று சிந்தித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், சோசியல் மீடியாவின் பதிவுகளைப் பார்த்து 70 % பேரின் வேலை நிராகரிக்கப்படுவதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களில் நாம் பகிரும் பதிவுகள் இருக்கும் வேலைக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
3. சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு இருக்கும் மதிப்புகளின் அடிப்படையில் தான் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனால், புத்திசாலித்தனத்துடன் சமூக வலைத்தளங்களைக் கையாள்வது நல்லது?
4. சமூக வலைத்தளங்களில் உங்களது சொந்த விஷயங்களை எந்த அளவுக்குப் பகிர்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். நீங்கள் பகிரும் பதிவுகளிலிருந்து உங்களது சொந்த விஷயங்கள் திருடப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அவை உங்களுக்கு எதிரானதாகத் திரும்பலாம். அதனால், எப்போதும் கவனமாக இருக்கவும்.
5. சமூக வலைத்தளங்கள் பல்வேறு விதங்களில் பயன்படுகின்றன. யார் நட்பு வேண்டுகோளை விடுத்தாலும் ஏற்றுக்கொண்டு நட்பு வட்டாரத்தை ஆயிரக்கணக்கில் பெருக்குபவர்களும் உண்டு. அப்படிப் பெருக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அனைத்து நண்பர்களையும் சமமாகப் பாவிக்காமல் தனித்தனி குழுக்களாகப் பிரித்துக்கொள்வது நல்லது. அப்படிப் பிரித்துக்கொண்டால் உங்களது படங்கள் மற்றும் பதிவுகளை குடும்பம், நண்பர்கள், மற்றவர்கள் என்று குறிப்பிட்டவர்கள் மட்டும் பார்க்கும் வண்ணம் பதிவிட்டுக் கொள்ளலாம். இது உங்கள் பிரைவசியைப் பாதுகாக்கும். அதே நேரத்தில் பிரச்னைகளையும் தவிர்க்கும்.
6. நீங்கள் பிளாக்கர் அல்லது தனிப்பட்ட நிபுணத்துவம் பெற்றவராக இருந்தால் உங்களுக்கென்று Fan பக்கங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். இதில் உங்களது குறிப்பிட்ட சொந்தத் தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்ள முடியும். சொந்த பக்கத்தில் உங்களது நண்பர்களுடன் இணைந்து தினசரி நடவடிக்கைகளை பகிர்ந்துகொள்ளலாம்.
7. உங்களது நண்பர் உங்களை பற்றிய சங்கடமான, பொருத்தமற்ற தகவல்களைப் பகிரும் போது, திறந்த மனப்பான்மையுடன் நேர்மையுடன் அந்தப் பிரச்னையைக் கையாளுங்கள். அவர்களைப் போன்றே சங்கடமான தகவல்களைப் பகிரவேண்டாம்.
8. உங்களை யாராவது மிரட்டினாலோ அல்லது உங்களைப் பற்றிய அவதூறு செய்திகளைப் பரப்பினால் அவர்களை அன்பிரண்ட் செய்து பிளாக் செய்துவிடுவது நல்லது. அவசியம் ஏற்படின் ரிப்போர்ட் அடித்துவிடுங்கள்.
9. தேவையான பாதுகாப்பு செயலிகளைப் பயன்படுத்துங்கள். முடிந்தவரை அவற்றை அப்டேட்டுடன் பயன்படுத்துங்கள்.
10. உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள், இணைப்பு ஆகியவற்றில் கவனமாக இருக்கவும். அந்த இணைப்புகளில் ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனே அழித்து விடுவது நல்லது.
முடிந்தவரை சமூக வலைத்தளங்களை பாதுகாப்புடன் கையாள்வோம். சிக்கலில்லாத வாழ்க்கையை வாழ்வோம்!
Comments