ஜெயராஜ்-பென்னிக்ஸ் பிரேதப்பரிசோதனை அறிக்கை மூலம் அவர்களுக்கு மோசமான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது - நீதிபதிகள்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருந்தது முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.
தந்தை-மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்ததாக எழுந்த புகார் குறித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து விசாரித்து பல்வேறு உத்தரவுகளை வழங்கி வருகிறது. இன்றைய விசாரணையின் போது, ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு, சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் வரை நெல்லை சரக ஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிபிஐ பலவித அனுமதிகளைப் பெற்று விசாரணை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அனைத்து காவல்துறையினரும் மோசமானவர்கள் அல்ல என்றாலும், ஒரு சிலரின் நடவடிக்கைகளால் இது போன்ற பிம்பம் ஏற்பட்டுவிடுகிறது என குறிப்பிட்ட நீதிபதிகள், ஜெயராஜ்-பென்னிக்ஸ் முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். அதனடிப்படையில் பார்க்கும்போது, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருந்ததும், ஐபிசி 302ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யவும் முகாந்திரம் உள்ளது என்றும் நீதிபதிகள் கூறினர்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சாட்சி அளிக்கையில் காவலர் ரேவதி மிகவும் அச்சமடைந்து காணப்பட்டதாக நீதித்துறை நடுவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த காவலருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது என்றனர். ஆகவே, வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் வரை, நெல்லை சரக ஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? அல்லது நெல்லை சிபிசிஐடி உடனடியாக வழக்கு விசாரணையை கையில் எடுக்க இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.
Comments