'எங்களின் தேசப்பற்றை யாரும் சந்தேகிக்க முடியாது'- கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா விளக்கம்

0 3992

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எப்போதெல்லாம் போர் சூழல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் யாருக்கு ஆதரவாக இருக்கின்றன என்கிற கேள்வி எழும். சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பில் இருப்பதால் , இந்த கேள்வி எழுவது இயற்கையானதுதுதான். இந்த நிலையில், தங்கள் தேசப்பற்று குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா விளக்கமளித்துள்ளார்.

டி.ராஜா கூறியிருப்பதாவது, ''இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள்தான் முன்னணியில் இருந்தனர். 'பூர்ண ஸ்வராஜ்' என்ற கோஷமும் கம்யூனிஸ்ட் கட்சியினரால் எழுப்பப்பட்டது. வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது இல்லை. உண்மையை சொல்லப் போனால், ஆங்கிலேயருக்கு அவர்கள் உதவிக்கரமாக இருந்தனர். இந்தியா 1947- ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. சீனப்புரட்சி 1948 -ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போதிருந்தே இரு நாடுகளும் நல்லுறவை பேண முற்பட்டன. உறவை வலுப்படுத்த 'ஹிந்தி சைனி பாய் பாய்' என்ற கோஷமும் உருவானது.

ஒரு கட்டத்தில் இந்தியா தொழில்வளத்தில் கவனம் செலுத்தி முன்னேற்றம் அடைந்தது. சீனா சோசலிச பாதையில் பயணித்தது. சுதந்திரம் பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு 1958-59 ம் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் எல்லை பிரச்னை உருவாகி இருதரப்பு உறவும் மோசமடைந்தது. இந்திய அரசும் கம்யூனிஸ்ட் கட்சியும் மக்மோகன் கோட்டை எல்லையாக வரையறுக்க வேண்டுமென்று எடுத்து சொன்னோம். ஆனால், சீனா பிரிட்டிஷாரால் வரையறுக்கப்பட்ட மக்மோகன் கோட்டை எல்லையாக ஏற்றுக் கொள்ள மறுத்தது. 1959 - ம்ஆண்டு சீனா மக்மோகன் கோட்டை மீறி இந்திய எல்லைக்குள் புகுந்தது. தொடர்ந்து 1962- ம் ஆண்டு போருக்கு அது வழி வகுத்தது.

சீன போரின் போது நாங்கள் முழுமையாக இந்தியாவுக்கு ஆதரவளித்தோம். இந்திய எல்லைக்குள் சீனா புகுந்தது தவறு என்று எடுத்துரைத்தோம். அப்போது, நாங்கள் ஒரே கட்சியாகத்தான் இருந்தோம். நேரு அரசுக்கு முழுமையாக ஆதரவளித்தோம். இந்திய ராணுவத்துக்கு உதவும் வகையில், பொதுமக்களிடத்தில் நிதி திரட்டினோம். இதனால், எங்களுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவும் பாதிக்கப்பட்டது. 1976-ம் ஆண்டு இரு நாடுகளும் மீண்டும் எல்லை பிரச்னைகளை தீர்க்க தூதரகரீதியிலான பேச்சுவார்த்தையை  தொடங்கின. இதற்கும் 10 ஆண்டுகளுக்கு பிறகே 1985- ம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். அப்போது, ராஜேஷ்வரராவ் தேசிய செயலாளராக இருந்தார். எங்களுக்கு இந்த நாடும் அதன் இறையாண்மையும்தான் முக்கியம். அதனால், எங்களின் தேசப்பற்றை யாரும் சந்தேகிக்க வேண்டாம். அது குறித்து கேள்வி எழுப்பவும் வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments