நீதிபதி இ- மெயிலில் அளித்த புகார்; காத்திருப்போர் பட்டியலில் தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி!

0 6310

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் கஸ்டடியில் இருந்த போது இறந்தனர். மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் வழக்கை விசாரித்து வருகின்றனர். கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன் இந்த வழக்கை நேரடியாக சாத்தான்குளம் தங்கியிருந்து, விசாரிக்க வேண்டும். சாத்தான்குளம் போலீஸ் நிலைய ஆவணங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து விசாரணை செய்து வருகிறார். சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சில ஆவணங்களை தருமாறு நீதிபதி பாரதிதாசன் கேட்டுள்ளார். அங்கிருந்த போலீஸார் அதற்கு மறுப்பு தெரிவித்து, நீதிபதியை ஒருமையில் பேசிதாக சொல்லப்படுகிறது.

உடனடியாக நீதிபதி பாரதிதாசன் இது குறித்து மதுரை நீதிமன்ற பதிவாளருக்கு இமெயில் மூலம் புகாரளித்தார். இந்த புகார் குற்றவியல் வழக்காக பதிவு செய்யப்பட்டு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரணைக்கு எடுத்தனர். நீதிபதி பாரதிதாசன் விசாரணைக்கு தடங்கலாக இருந்த தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் போலீஸ்காரர் மகராஜன் என்பவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த மூன்று பேரும் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேரடியாக ஆஜராக வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி. என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு?' என்று கண்டித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments