'பைக்குகள் மீது தீராத காதல்' - ஹார்லி டேவிட்ஸனை ஓட்டும் முயற்சியில் தலைமை நீதிபதி பாப்டே
இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருப்பவர் ஷரத் அரவிந்த் பாப்டே . சிறு வயதிலிருந்தே புல்லட்கள் மீது இவருக்கு அலாதி பிரியம் உண்டு. 2019- ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பாப்டே பொறுப்பேற்றார். நாட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னரும் பல பேட்டிகளில், பைக்குகள் மீதான தன் காதல் குறித்து பாப்டே சொன்னதும் உண்டு. நாக்பூரில் வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில் சொந்தமாக பைக் வைத்திருந்தையும் ஒரு விபத்துக்கு பிறகு, அதை ஓட்டுவதில்லை என்றும் பாப்டே ஒரு முறை சொன்னார்.
தற்போது கொரோனா காலத்தில் சொந்த ஊரான நாக்பூரில் அவர் இருக்கிறார். நேற்று பாப்டே , ஹார்லி டேவிட்ஸன் CVO 2020 ரக பைக்கை ஒட்டுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. ஹார்லி டேவிட்ஸன் பைக் டீலர் ஒருவர், இந்த பைக்கை அவரிடத்தில் டெமோ காட்டுவதற்காக கொண்டு வந்துள்ளார். புகைப்படம் வைரலானதை தொடர்ந்து , 'தலைமை நீதிபதியே ஹெல்மட் இல்லாமல் பைக் ஓட்டலாமா' என்கிற விமர்சனத்தையும் சிலர் முன்வைத்தனர். இதையடுத்து, தலைமைநீதிபதி பைக்கில் அமர்ந்து மட்டுமே பார்த்தார் . ஓட்டவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது .
அயோத்தி கோயில் விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளின் அமர்வுகளில் பாப்டே இடம் பெற்றுள்ளார். தற்போது, பாப்டேவுக்கு 64 வயதாகிறது.
Comments