வேடந்தாங்கல் விவகாரம் - பசுமை தீர்ப்பாயம் சார்பில் குழு

0 1674

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அருகிலுள்ள சன் பார்மா நிறுவனத்தினால் அங்குள்ள ஏரி மற்றும் அதனை சுற்றி உள்ள நீர் நிலைகளில் மாசு ஏற்படுகின்றனவா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

சன் பார்மா நிறுவனம் எந்தவித சட்டப்படியான அனுமதியும் இன்றி சரணாலயதின் மைய பகுதிக்கு மிக அருகில் இயங்குவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் செல்வராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவில்,  சுற்றுச்சூழல் துறை தடையில்லா சான்று, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி சான்று உள்ளிட்ட எந்த  அனுமதியும் இன்றி சன் பார்மா இயங்குவதாக கூறப்பட்டிருந்தது.

சன் பார்மாவில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரி, மற்றும் அருகில் இருக்க கூடிய நீர்நிலைகள், விவசாய நிலங்களில் கலந்து மாசு ஏற்படுத்துவதாகவும், இதனால்  பறவைகள் பாதிக்கப்படுவதாகவும் முறையிடப்பட்டிருந்தது.

இதனை கட்டுப்படுத்தி வேடந்தாங்கல் சரணாலயத்தை பாதுகாக்க நிரந்தரமாக குழு அமைக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதித்துறை மற்றும் வல்லுநர் குழு உறுப்பினர்கள் அமர்வு, சன் பார்மா நிறுவனம் முறையான சுற்றுச்சூழல் அனுமதியை பெற்று இயங்குகின்றதா?, நிறுவனத்தில் இருந்து வெளியாகும் மாசுவை கட்டுப்படுத்த போதுமான வசதிகள் உள்ளனவா? சட்டத்துக்கு புறம்பாக கழிவு நீர் விவசாய நிலங்களிலும், நீர்நிலைகளிலும் வெளியேற்ற படுகிறதா? அப்படியெனில், இதனால் நீர் மற்றும் மண்ணின் தரம் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு செய்ய எடுக்கவேண்டிய நடவடிக்கை மற்றும் விதி மீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் இழப்பீடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய குழு அமைத்து உத்தரவிட்டனர்.

இக்குழுவில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற துறையின் மூத்த மண்டல அதிகாரி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த மண்டல அதிகாரி, வன உயிர் அதிகாரி, தமிழ்நாடு வன உயிரியல் மற்றும் சரணாலயம் துறை அதிகாரி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் காஞ்சிபுரம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அறிவியலாளர் ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments